தேவையில்லாத வதந்திகளைப் பரப்பி வருகிறீர்கள்: ஸ்டுடியோ க்ரீன் அறிக்கைக்கு திருப்பூர் சுப்பிரமணியம் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

'காட்டேரி' வெளியீடு ஒத்திவைப்பு தொடர்பாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு திருப்பூர் சுப்பிரமணியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டி.கே. இயக்கத்தில் வைபவ், ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன், சோனம் பாஜ்வா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காட்டேரி'. ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்தப் படம் நாளை (டிசம்பர் 25) வெளியாவதாக இருந்தது. இதற்காகத் திரையரங்குகள் ஒப்பந்தம், விளம்பரப்படுத்தும் பணிகள் எனத் துரிதமாக பணிபுரிந்து வந்தார்கள்.

ஆனால், திடீரென்று நேற்றிரவு (டிசம்பர் 23) 'காட்டேரி' வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு கரோனா இரண்டாம் அலை பரவி வருவதாக வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் வெளியீட்டை ஒத்திவைப்பதாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்தது.

இதற்குத் திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பெரும் வருத்தமளிக்கக் கூடியது. படம் வெளியிடுவது, வெளியிடாமல் இருப்பது எல்லாம் அவர்களுடைய சொந்த விருப்பம். எங்களுடைய சொந்தக் காரணங்களுக்காக வெளியிடவில்லை என்று சொல்லியிருக்கலாம். அதைவிடுத்து கரோனா இரண்டாம் அலை என்று தேவையில்லாத வதந்தியைப் பரப்புவது மிகவும் வருந்தத்தக்கது.

மத்திய அரசின் சுகாதாரத் துறைக் குழுவினர் நேற்றைய முன் தினம் கூட்டமொன்றைக் கூட்டினார்கள். அதில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பிலும் கலந்து கொண்டார்கள். அதில் கரோனாவின் 2-வது அலை இந்தியாவில் வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெளிவாகச் சொல்லியிருக்கிறது. அப்படியிருக்கும்போது இவர்களாக உருவகப்படுத்தி இதேபோன்று சொல்வது மிகவும் வருத்தத்திற்குரியது.

நேற்றைய தினம் வெளியான 'வொண்டர் வுமன்' படத்துக்கு என்ன வரவேற்பு இருந்தது என்பதை இவர்கள் அறிய மாட்டார்கள். திருப்பூரில் உள்ள எனது திரையரங்கில் 'வொண்டர் வுமன்' திரைப்படம் 2 காட்சிகள் திரையிடப்பட்டது. 811 பேர் வந்து படம் பார்த்துச் சென்றுள்ளனர். படத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

அப்படியிருக்கும்போது கரோனா மீது பழியைப் போட்டு மக்களைப் பயமுறுத்துவது உண்மையில் வருத்தமளிக்கிறது. தயவுசெய்து இதேபோன்று செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்போதுதான் திரையரங்கிற்கு மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் தேவையில்லாத வதந்திகளைப் பரப்பி வருகிறீர்கள். மிகவும் வருந்துகிறோம்".

இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE