மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டேனா?- ஹ்ரித்திக் முன்னாள் மனைவி சூசன் கான் விளக்கம்

By செய்திப்பிரிவு

மும்பையில் கரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் இன்னும் தொடர்ந்து அமலில் இருக்கின்றன. இதனால் இரவுநேர கிளப்புகள், மதுபான விடுதிகள் திறந்திருப்பதில் நேரக் கட்டுப்பாடு இருக்கிறது. இந்நிலையில் மும்பை விமான நிலையம் அருகே இருக்கும் டிராகன்ப்ளே எக்ஸ்பீரியன்ஸ் எனும் இரவு விடுதியில் கடந்த திங்கள் (21.12.20) அன்று மும்பை போலீஸார் திடீர் ரெய்டு நடத்தினர்.

இதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் கான், பாடகர் குரு ராந்தவா உள்ளிட்ட 34 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 13 பெண்கள் இருந்ததால் அவர்களை போலீஸார் விடுவித்து நோட்டீஸ் அனுப்பினர். ஆண்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த கைது சம்பவம் அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சூசன் கான் விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நெருங்கிய நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விருந்துக்காக சென்றிருந்தேன். எங்களில் சிலர் அங்கிருந்து மற்றொரு கிளப்புக்கு சென்றோம். அதிகாலை 2.30 மணிக்கு சில அதிகாரிகள் அங்கு நுழைந்தனர். கிளப் நிர்வாகிகளும், அதிகாரிகளும் ஆலோசித்து கொண்டிருந்த நேரத்தில் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் 3 மணி நேரம் காத்திருந்தோம். ஒருவழியாக காலை 6 மணிக்கு நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம். எனவே ஊடகங்களில் வரும் கைது தொடர்பான செய்திகள் அனைத்தும் உண்மைக்கும் புறம்பானவை.

நாங்கள் ஏன் காக்க வைக்கப்பட்டோம், அதிகாரிகளுக்கும் கிளப் நிர்வாகிகளும் என்ன பேசினார் என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. எனக்கு மும்பை போலீஸ் மீதும் மக்களை காக்க அவர்கள் மேற்கொள்ளும் தன்னலமற்ற முயற்சிகள் மீதும் மிகுந்து மதிப்பு உள்ளது.

இவ்வறு சூசன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE