'கனா' வெளியாகி 2 ஆண்டுகள்: படக்குழுவினர் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

'கனா' வெளியாகி 2 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, படக்குழுவினர் நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளனர்.

பாடலாசிரியர், பாடகர், நடிகர் என அறியப்பட்ட அருண்ராஜா காமராஜ், இயக்குநராக அறிமுகமான படம் ‘கனா’. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். 2018-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி வெளியான இந்தப் படம் தமிழில் பெரிய வரவேற்பைப் பெற்றது.

தெலுங்கில் 'கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (டிசம்பர் 21) 'கனா' திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இதனை முன்னிட்டு, படக்குழுவினர் பலரும் நெகிழ்ச்சியுடன் நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "இதே நாள் 2 வருடங்களுக்கு முன்பு 'கனா' வெளியானது. ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை அது ஏற்படுத்தியது.

ஊக்கத்தைத் தந்த இப்படி ஒரு படத்தில் பங்காற்றியதை எனது ஆசிர்வாதமாக உணர்கிறேன். என்றும் எனது இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும் படத்தில் என்னை முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வு செய்த சிவகார்த்திகேயன் மற்றும் அருண்ராஜா காமராஜுக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் தனது ட்விட்டர் பதிவில், " 'கனா' வெளியாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. காலம் கூடக் கூட உங்கள் அன்பும் 'கனா' திரைப்படத்தின் மீதும் எம் குழுவினர் மீதும் கூடிக்கொண்டே இருப்பதும், அதனை நீங்கள் தொடர்ந்து அளிப்பதும் எங்களின் பெருமைக்குரிய வரம். அன்பு தொடரட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தப் படத்தைத் தயாரித்த சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் பிரத்யேக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு தம் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE