எனக்காக விஜய் வாங்கித் தந்த ஸ்பீக்கர்: மாற்றுத்திறனாளி ரசிகரின் நெகிழ்ச்சிப் பகிர்வு

By செய்திப்பிரிவு

நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்களான மாற்றுத்திறனாளி தம்பதியர், தாங்கள் விஜய்யைச் சந்தித்த அனுபவத்தைத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளனர்.

மிமிக்ரி கலைஞரும், வளர்ந்து வரும் திரைப்பட இயக்குநருமான குமார் காசி, பார்வைக் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி. இவரது மனைவியும் மாற்றுத்திறனாளியே. இருவருமே தீவிரமான விஜய் ரசிகர்கள். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில், தாங்கள் விஜய்யைச் சந்திக்க பல ஆண்டுகளாக முயன்று வருவதாகவும், ஆனால் நடக்கவில்லை என்றும், விஜய்யைச் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் மேடையில் பேசியிருந்தனர்.

இதைக் கேட்டு நடிகர் விஜய், இவர்களை மாஸ்டர் படப்பிடிப்புத் தளத்துக்கே வரவழைத்துப் பேசினார். இந்த அனுபவம் குறித்தும், விஜய் தனக்குத் தந்த பரிசு குறித்தும் குமார் காசி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

"நான் கருவில் உருவாகும்போதே தளபதி ரசிகன். பாலு மகேந்திராவின் மாணவன் நான். எண்ணற்ற மிமிக்ரி நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறேன். எனது ஆசையே தளபதி விஜய்யைச் சந்திக்க வேண்டும் என்பதுதான்.

2020 ஜனவரி 7 என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அதற்கு முந்தைய நாள்தான் விஜய்யைச் சந்திக்கப் போகிறீர்கள் என்று சொன்னார்கள். என்னால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் என்னைச் சந்திக்க வைப்பதாகப் பல பேர் சொல்லியிருக்கின்றனர். அதற்குக் கைமாறாக இலவசமாக மிமிக்ரி நிகழ்ச்சி நடத்தித் தரச் சொல்வார்கள். நானும் நம்பி இலவசமாகச் செய்து கொடுத்திருக்கிறேன். ஆனால், இதுவரை யாருமே எனக்கு உதவியதில்லை. ஆனால், அதெல்லாம் பெரிய வலியாக நான் நினைத்ததில்லை.

ஏனென்றால் ஒரு நாள் கண்டிப்பாக விஜய்யைச் சந்தித்து விடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. அதிகமான மாற்றுத்திறனாளி ரசிகர்களைக் கொண்டவர் விஜய்தான் என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன்.

ஒரு வழியாக 'மாஸ்டர்' படப்பிடிப்பில்தான் விஜய்யை நானும் என் மனைவியும் சந்தித்தோம். அது ஒரு சண்டைக் காட்சி. காட்சியை முடித்துவிட்டு அவரே எங்கள் அருகில் வந்து, நான் உடை மாற்றிவிட்டு வருகிறேன், ஒரு ஐந்து நிமிடம் எடுத்துக் கொள்கிறேன் சரியா என்றார். அவர் என்னிடம் வந்து அதைச் சொல்லியிருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. மனிதரை மதிக்கக் கூடிய அவரது அந்தப் பண்பில் நான் நெகிழ்ந்துவிட்டேன். கண் கலங்கிவிட்டேன்.

ஐந்து நிமிடங்கள் கழித்து என்னையும் என் மனைவியையும் கையைப் பிடித்துக் கொண்டு, அவரது கேரவனுக்கு அழைத்துச் சென்று, அவர் அருகில் அமரவைத்துப் பேசினார். என்ன நண்பா, எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு, நல்லா இருக்கீங்களா என்று ஆரம்பித்தார். அரை மணி நேரம் பேசினோம். அரை மணி நேரத்தை என் வாழ்வில் பாக்கியமாகக் கருதுகிறேன்.

கண்ணால பாக்கற உலகத்தை விட மனசார பாக்கற உலகம் அழகானது என்று ஒரு வசனம் பேசியிருப்பார். அந்த வசனத்தைப் பற்றி அவரிடம் கேட்டேன். சில வசனங்கள் பேசும்போது மனதளவில் தான் மிகவும் ரசித்துப் பேசுவதாகவும், அந்த வசனத்தை அப்படித்தான் பேசியதாகவும் சொன்னார்.

அவரிடம் நான் அதிகம் பேசினேன் என்பதை விட அழுதேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நம் வாழ்வில் சந்திக்கக் கடினமான ஒரு நபரைச் சந்தித்துவிட்டால் நமக்கு எப்படி இருக்கும். அன்று எனக்கு அப்படித்தான் இருந்தது.

உன்னையெல்லாம் அவர் சந்திக்க மாட்டார் என்று பலர் என்னிடம் சொல்லியிருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் நன்றி. ஏனென்றால் அவர் உங்களைச் சந்திக்கவில்லை. என்னைச் சந்தித்தார், என்னை மதித்துப் பேசினார்.

மேலும் நாங்கள் சந்திக்க வருகிறோம் என்று தெரிந்து எங்களுக்காக அண்ணனே சென்று ஒரு ஸ்மார்ட் ஸ்பீக்கரை வாங்கியிருக்கிறார். உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இது இருக்கும் என்று சொல்லி அதை எங்களுக்குப் பரிசாகத் தந்தார். என் உயிர் இருக்கும் வரை இந்தப் பரிசு என்னிடம் இருக்கும்.

அவருடன் நாங்கள் காஃபி அருந்தினோம். அந்தக் கோப்பை எனக்கு வேண்டும் என்று கேட்டேன். வேண்டுமென்றால் காஃபியும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அதையும் எங்களுக்குத் தந்தார்''.

இவ்வாறு குமார் காசி தெரிவித்தார்.

குமாரின் மனைவி பேசுகையில், "நேரம் சென்றதே தெரியவில்லை. ஐந்து நிமிடங்கள் போல இருந்தது. இன்னும் கூட பேச மாட்டோமா என்று தோன்றியது. நாம் அடிக்கடி சந்திப்போம், கவலைப்படாதீர்கள் என்று அண்ணன் சொன்னார். அந்த வார்த்தை எனக்குச் சந்தோஷமாக இருந்தது" என்றார்.

குமார் காசி ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் உள்ளார். இந்தியாவின் முதல் பார்வைக் குறைபாடு மாற்றுத்திறனாளி இயக்குநர் என்கிற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். அவரது இந்தப் படத்தில் பணியாற்றும் அனைவருமே பார்வைக் குறைபாடு இருக்கும் மாற்றுத்திறனாளிகள். இதை கின்னஸ் சாதனையில் இடம்பெற வைக்கவும் குமார் முயற்சி செய்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE