ட்விட்டரில் கங்கணா - தில்ஜித் தொஸான்ஜ் கருத்து மோதல்

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நடிகர் தில்ஜித் தொஸான்ஜ், நடிகை பிரியங்கா சோப்ராவின் நோக்கத்தைக் கேள்வி கேட்டிருக்கும் கங்கணாவுக்குப் பதிலளித்துள்ளார்.

டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்துக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் தில்ஜித் தொஸான்ஜ் மற்றும் பிரியங்கா சோப்ராவும் அடக்கம். இதுகுறித்து நடிகை கங்கணா ரணாவத் விமர்சித்திருந்தார். தொடர்ந்து அவருக்கு தில்ஜித் பதிலளிக்க, இந்தக் கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது.

சனிக்கிழமை அன்று ஒலிப்பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கும் தொல்ஜித், "மக்களே! நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பகிர வேண்டும். காலையில் இரண்டு மாத்திரை, மாலையில் இரண்டு மாத்திரை என்று சொல்வதைப் போல காலையில் எனது பெயரைச் சொல்லவில்லையென்றால் உணவை ஜீரணிக்க முடியாமல் 2-3 பெண்கள் இருக்கின்றனர். அதன் பிறகுதான் அவர்களுக்கு உணவு செரிமானம் ஆகிறதாம்.

அதில் ஒரு பெண்ணுக்கு நம்மை அதிகம் வெறுப்பேற்றும் ஒரு குரல் இருக்கிறது. அவர்களுக்கு எந்தக் கவனமும் தராதீர்கள். அந்தக் கரகரப்பான குரலில் அவர்களே குரைத்துக் கொள்ளட்டும்" என்று பேசியுள்ளார்.

இதில் வெறுப்பைத் தரும் குரல் என்று ஒரு பெண்ணின் குரலைப் போல மாற்றிப் பேசி, சிரித்துக் கிண்டல் செய்துள்ளார். அவர் கங்கணாவைக் குறிப்பிட்டதாகவே தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. .

காணொலி ஒன்றை வெளியிட்டிருந்த கங்கணா, "கடந்த 10-12 நாட்களாக இணையத்தில் உணர்வு ரீதியாகவும், மனநல ரீதியாகவும் கும்பல் வன்முறையை நான் எதிர்கொண்டு வருகிறேன். பாலியல் வன்புணர்வு, கொலை மிரட்டல்கள் கூட வந்திருக்கின்றன. எனவே, நாட்டு மக்களிடம் நான் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்" என்று பேசினார். மேலும், விவசாயிகள் போராட்டம், ஷாஹின் பாக் பெண்மணி உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றிப் பேசிவிட்டு, தில்ஜித் மற்றும் பிரியங்காவின் நோக்கத்தைக் கங்கணா கேள்வியெழுப்பியுள்ளார்.

கங்கணாவின் காணொலிக்குப் பின் மீண்டும் ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பகிர்ந்த தில்ஜித், "வெறுப்பைப் பரப்ப வேண்டாம். கர்மா என்பது மிகவும் முக்கியம். இந்து, இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள் என நாம் அனைவரும் ஒன்று. குழந்தைப் பருவத்திலிருந்து அதுதான் நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்று கூட பல நம்பிக்கைகளைச் சேர்ந்தவர்கள் ஒரே திரைப்படத்தில் ஒரு குடும்பத்தைப் போலப் பணியாற்றுகின்றனர். ஆனால் சில மக்களுக்கு (ஒற்றுமையில்) தீ வைக்க வேண்டும் என்றே விருப்பம்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE