கோல்டன் குளோப் திரையிடலுக்கு 'சூரரைப் போற்று', 'அசுரன்' தேர்வு

By செய்திப்பிரிவு

கோல்டன் குளோப் திரையிடலுக்கு 'சூரரைப் போற்று' மற்றும் 'அசுரன்' ஆகிய இரு தமிழ்ப் படங்கள் தேர்வாகியுள்ளன.

ஹாலிவுட் ஃபாரின் ப்ரெஸ் அசோசியேஷன் என்கிற அமைப்பு சினிமா மற்றும் சின்னத்திரையில் சிறந்த படைப்புகளையும், கலைஞர்களையும் வருடா வருடம் கவுரவித்து வருகிறது. இதுவே கோல்டன் குளோப் என்று அழைக்கப்படுகிறது. கோல்டன் குளோப் விருது என்பது மிகவும் பிரபலமானது.

78-வது கோல்டன் குளோப் விருது விழா அடுத்த ஆண்டு பிப்ரவரியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு போட்டிக்குச் சில விதிமுறைகளை மாற்றினார்கள். ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களும் கோல்டன் குளோப் மற்றும் அகாடமி விருதுகளில் போட்டியிடத் தகுதியுண்டு என அறிவித்தார்கள்.

இதனால் பல்வேறு மொழிகளிலிருந்து படங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இறுதிப் பட்டியல் கோல்டன் குளோப் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழிலிருந்து 'சூரரைப் போற்று' மற்றும் 'அசுரன்' ஆகிய படங்கள் திரையிடத் தேர்வாகியுள்ளன.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் கோல்டன் குளோப் விருதுக்கான உலகளாவிய திரையிடலுக்குத் தேர்வாகியிருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

மேலும், திரையரங்கில் வெளியான 'அசுரன்' படம் தேர்வாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த இந்தப் படமும் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE