விவசாயிகள் போராட்டத்தில் தீவிரவாதிகளின் பங்கு: கங்கணா மீண்டும் சர்ச்சை கருத்து

விவசாயிகள் போராட்டத்தில் தீவிரவாதிகள் பங்கெடுக்கத் தொடங்கியுள்ளதாக நடிகை கங்கணா குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்ற பில்கிஸ் பனோ என்ற 86 வயது மூதாட்டியை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இவர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர் ஆவார்.

இதுகுறித்து நடிகை கங்கணா ரணாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “ரூ.100 கொடுத்தால் மூதாட்டி பில்கிஸ் பனோ எந்தப் போராட்டத்திலும் பங்கேற்பார்” எனப் பதிவிட்டிருந்தார். இதற்குப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அந்த மூதாட்டிக்குப் பதில் வேறு ஒருவரின் புகைப்படத்தை கங்கணா பதிவிட்டிருந்தார். அதுவும் இணையத்தில் சர்ச்சையானது.

கங்கணாவின் கருத்துக்கு பஞ்சாப்பைச் சேர்ந்த பாடகரும், நடிகருமான திலிஜித் தோசான்ஜ் கடும் கண்டனம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கங்கணாவுக்கும் அவருக்கும் இடையே ட்விட்டரில் வார்த்தைப் போர் முற்றியது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நேற்று (19.12.20) தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கணா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''கடந்த 10, 12 நாட்களாக உணர்வு ரீதியான, மன ரீதியான தாக்குதல்களை ஆன்லைனில் எதிர்கொண்டு வருகிறேன். பாலியல் மற்றும் கொலை மிரட்டல்களும் கூட வருகின்றன. எனவே நாட்டு மக்களிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.

ஒட்டுமொத்த விவசாயப் போராட்டமும் அரசியல் கட்சிகளால் தூண்டி விடப்பட்டுள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை. தீவிரவாதிகளும் அதில் பங்கெடுக்க தொடங்கியுள்ளனர். நான் படித்தது, வளர்ந்தது எல்லாமே பஞ்சாப் மாநிலத்தில்தான். அங்கிருக்கும் 99 சதவீத மக்கள் காலிஸ்தானை விரும்பவில்லை. அவர்கள் நாட்டை நேசிக்கிறார்கள். நாட்டைப் பிரிக்க அவர்கள் விரும்பவில்லை.

தீவிரவாதிகளுக்கும், அந்நிய நாட்டு சக்திகளுக்கும் முன்னால் நாம் பலவீனமானவர்களாகி விட்டோமா? ஒவ்வொரு நாளும் நான் என்னுடைய நோக்கங்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டியிருக்கிறது. இத்தனைக்கும் நான் ஒரு தேசப்பற்றாளர். ஆனால், திலிஜித் தோசான்ஜ் மற்றும் பிரியங்கா சோப்ரா போன்றோர் செய்து கொண்டிருப்பது என்ன? ஏன் அவர்களை யாரும் கேள்வி கேட்பதில்லை? நாட்டுக்காக நான் செய்வது அரசியல் என்றால் அவர்கள் செய்வது என்ன? தயவுசெய்து அவர்களிடம் கேளுங்கள்''.

இவ்வாறு கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE