'பூமி' படத்தைத் தொடர்ந்து ஓடிடி வெளியீடு?- பேச்சுவார்த்தையில் உள்ள படங்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

'பூமி' படத்தைத் தொடர்ந்து ஓடிடி வெளியீட்டுக்குப் பல்வேறு படங்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு நவம்பர் 10-ம் தேதி திரையரங்குகள் திறக்கப்பட்டன. 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது. நவம்பர் 10-ம் தேதியிலிருந்து திரையரங்கில் பல்வேறு படங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், எதற்குமே எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை.

ஹாலிவுட் படமான 'டெனெட்' படத்துக்கு மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் கூட்டம் இருந்தாலும், ஒற்றைத் திரையரங்குகளில் கூட்டமில்லை. இதனால், தயாரிப்பாளர்கள் கடும் அச்சத்தில் இருக்கிறார்கள். அனைவருமே 'மாஸ்டர்' வெளியீட்டுக்குப் பிறகு திரையரங்குகளில் கூட்டம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

இதனிடையே, சில படங்கள் நேரடி ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'பூமி' திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது. பொங்கல் வெளியீடாக இருக்கும் எனத் தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'டெடி' படத்தையும் ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனமே வாங்கியுள்ளது. பொங்கலுக்குப் பிறகு ஏதேனும் ஒரு தேதியில் வெளியாகும். 'பூமி' மற்றும் 'டெடி' ஆகிய படங்கள் ஓடிடி வெளியீட்டை உறுதி செய்து ஒப்பந்தமும் போடப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள 'சுல்தான்', விஷால் நடித்துள்ள 'சக்ரா', சந்தானம் நடித்துள்ள 'டிக்கிலோனா' ஆகிய படங்கள் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் 'சக்ரா' படக்குழு ஓடிடியில்தான் வெளியீடு என்பதில் உறுதியாக இருக்கிறது.

'சுல்தான்' மற்றும் 'டிக்கிலோனா' ஆகிய படக்குழுக்கள் திரையரங்க வெளியீட்டுக்கும், ஓடிடி வெளியீட்டுக்கும் தயாராக இருப்போம் என்று முடிவு செய்துள்ளன. ஓடிடியில் நல்ல விலைக்குக் கேட்டால் உடனடியாகக் கொடுத்துவிடவும் வாய்ப்புள்ளது. 'மாஸ்டர்' படத்துக்கு மக்கள் கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தால், இந்த இரண்டு படங்களுமே திரையரங்க வெளியீட்டைத் தேர்வு செய்யவும் வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE