'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்: ஆமிர் கான் விலகல்?

By செய்திப்பிரிவு

'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கிலிருந்து ஆமிர் கான் விலகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

2017-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி வெளியான இந்தப் படத்தின் அனைத்து ரீமேக் உரிமைகளும் தயாரிப்பாளர் சஷிகாந்திடம் தான் இருக்கிறது. இந்தியில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து சஷிகாந்த் தயாரிக்கப் பணிகள் தொடங்கப்பட்டன. புஷ்கர் - காயத்ரி இருவருமே இயக்க ஒப்பந்தமானார்கள்.

இந்தப் படத்தின் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. முதலில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷாரூக் கான் நடிப்பதாக இருந்தது. ஆனால், முழு திருப்தி இல்லை என விலகிவிட்டதாகக் கூறப்பட்டது. அவரைத் தொடர்ந்து விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஆமிர் கான், மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகான் ஆகியோர் நடிப்பது உறுதியானது.

இந்நிலையில், கரோனா அச்சுறுத்தலால் பல்வேறு படத்தின் பணிகள் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டது. இதனால் முன்பே ஒப்புக் கொண்ட பணிகள் அனைத்துமே மாறியிருப்பதால் 'விக்ரம் வேதா' படத்தின் இந்தி ரீமேக்கிலிருந்து ஆமிர் கான் விலகிவிட்டதாக பாலிவுட்டின் முன்னணி ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களை இயக்க வாய்ப்பு கிடைத்தும், புஷ்கர் - காயத்ரி இந்தி ரீமேக்குக்காகத் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE