2019 பார்ட்டியில் என்ன நடந்தது? - கரண் ஜோஹாரிடம் விளக்கம் பெற்ற என்சிபி 

2019ல் கரண் ஜோஹார் இல்லத்தில் நடந்த பார்ட்டியில் போதை மருந்து பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டையொட்டி, அன்று என்ன நடந்தது என்பது குறித்து போதை மருந்துத் தடுப்புப் பிரிவு விளக்கம் கேட்டுப் பெற்றுள்ளது. தற்போது அதன் உண்மைத்தன்மை விசாரிக்கப்பட்டு வருகிறது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ மேற்கொண்ட விசாரணையில், அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்திக்கு போதைப் பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

மேலும், சுஷாந்த் சிங்குக்கு அவர் போதைப் பொருட்களை வழங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பாலிவுட்டில் போதை மருந்து பழக்கம் பற்றிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல பாலிவுட் கரண் ஜோஹாரின் வீட்டில் நடந்த ஒரு பார்ட்டியின்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதில் தீபிகா படுகோன், அர்ஜுன் கபூர், விக்கி கவுஷல், வருண் தவன், ரன்பீர் கபூர், மலைகா அரோரா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததாகவும், இதனால் போதைப் பொருள் வழக்கில் கரண் ஜோஹாருக்குத் தொடர்பிருக்கலாம் என்கிற ரீதியில் செய்திகள் பரவின.

இந்தச் செய்திக்கு கரண் ஜோஹார் மறுப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். தான் போதைப் பொருட்களைத்தான் பயன்படுத்துவதுமில்லை. அவற்றை ஊக்குவிப்பதுமில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் கடந்த செப்டம்பர் மாதம், கரண் ஜோஹார் வீட்டில் நடந்த பார்ட்டி வீடியோவுக்கும், போதைப் பொருள் வழக்குக்கும் தொடர்பில்லை என்று என்சிபி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால் இந்த வீடியோ குறித்து விளக்கம் தர வேண்டும் என்று கேட்டு போதை மருந்து தடுப்புப் பிரிவினர் கரண் ஜோஹாருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

இன்றைக்குள் (வெள்ளிக்கிழமை) இந்த விளக்கம் தர வேண்டும் என்கிற கட்டாயம் இருந்ததால் கரண் ஜோஹார் தனது பதிலை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். இதன் உண்மைத்தன்மை தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, ஷிரோமனி அகாலி தள் கட்சியைச் சேர்ந்த மஞ்ஜீந்தர் சிங் சிர்ஸா என்பவர் அந்த வீடியோ குறித்துப் புகார் அளித்திருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாது போதை மருந்து தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE