இன்ஸ்டாகிராமில் தனது பெயரை பயன்படுத்தி போலி குறுந்தகவல் - விஷ்ணு விஷால் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘எஃப்ஐஆர்’ திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அத்துடன் ஒரு ஸ்க்ரீன்ஷாட்டையும் இணைத்திருந்தார். அதில் மதன் என்ற பெயரில் ஒருவர் யாரோ சிலருக்கு ஒரு குறுந்தகவலை அனுப்பியுள்ளார். அந்த குறுந்தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த குறுந்தகவல் ஒரு தமிழ் திரைப்படத்துக்காக அனுப்பப்படுகிறது. இப்படத்துக்கு பின்னால் திறமையாளர்களின் குழு ஒன்று உள்ளது. புதிய தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இந்த செய்தி அவரிடமிருந்தே அனுப்பப்படுகிறது. அவர் உங்களை இப்படத்தில் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். பெரும் ஊதியம் கிடைக்கும். நீங்கள் விருப்பப்பட்டால் மேற்கொண்டு தகவல்களை நான் உங்களுக்கு அளிக்கிறேன். இப்படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார்.

இவ்வாறு அந்த குறுந்தகவலில் கூறப்பட்டுள்ளது.

இதை பகிர்ந்துள்ள விஷ்ணு விஷால், தனது பெயரை தவறான காரியங்களுக்காக பயன்படுத்த முயற்சிப்போரிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இது போன்ற செய்திகளை பரப்புவர்களுக்கு தனது கண்டனங்களையும் தெரிவித்துள்ளார்.

தற்போது தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் தவிர்த்து வேறு எந்த நிறுவனத்தின் தயாரிப்பிலும் தான் நடிக்கவில்லை என்றும் விரைவில் இது குறித்து காவல்துறையில் புகாரளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE