கணவரைக் கூட உருவ கேலி செய்ய விடாதீர்கள்: நகுல் மனைவி ஸ்ருதி பதிவு

By செய்திப்பிரிவு

உங்களின் கணவர் கூட உங்கள் உருவத்தை வைத்து உங்களை கேலி செய்யக் கூடாது என நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி பதிவிட்டுள்ளார்.

நடிகை தேவயானியின் இளைய சகோதரர் நடிகர் நகுல். இவர் 2016ஆம் ஆண்டு தொகுப்பாளர் ஸ்ருதி பாஸ்கர் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். நகுல் - ஸ்ருதி இருவருமே சமூக வலைதளங்களில் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையைப் பற்றிப் பகிர்ந்து வருபவர்கள்.

ஆகஸ்டு மாதம் தனக்குக் குழந்தை பிறந்தது குறித்து ஸ்ருதி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். தற்போது பிரசவத்துக்குப் பின் இருக்கு உருவ அமைப்பு, உருவ கேலி, அழகு பற்றிய மனநிலை ஆகியவை பற்றி நீண்டப் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

"உங்கள் பிரகாசத்தை யாரும் மங்கலாக்க விடாதீர்கள். அழகு என்பது தோல்வரைக்கும்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கொஞ்சம் நேரம் எடுத்து நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதைப் பாருங்கள். மேலும் ஸ்வாதியின் பக்கத்துக்குச் சென்று அவர் பகிர்ந்திருக்கும், உருவ கேலி செய்பவர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்பதைப் பற்றிய 10 நிமிடக் காணொலியைப் பாருங்கள். அப்படி கேலி செய்பவர்களை நீங்கள் எதிர்கொண்டு அவர்களிடமும் அந்தக் காணொலியைப் பகிரலாம்.

ஒவ்வொரு உடலும், ஒவ்வொரு கர்ப்பமும், ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானது. உங்களை, உங்கள் குழந்தையை வேறு யாருடனும் ஒப்பிடக் கூடாது. எல்லோருமே மேம்படும் நிலையில் இருப்பவர்கள்தான்.

நான் புடவையில் இருக்கும் இந்தப் புகைப்படத்தைப் பகிரும் போது, ஆஹா நான் இதை நன்றாக உடுத்தியிருக்கிறேன், மக்களுக்கு இந்தப் புடவைப் பிடிக்கும், இதுபோல வாங்க வேண்டும் என்று விரும்புவார்கள் என்றுதான் உண்மையில் நினைத்தேன்.

ஆனால், நான் எப்படி ஒல்லியாக இருக்கிறேன், குழந்தை பிறந்து 3 மாதங்கள்தான் ஆகின்றன, எப்படித் தழும்புகள் எதுவும் இல்லை என்றே பலரும் கேட்டது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

அப்போது இருந்ததும், இப்போது இருப்பதும் நான்தான். பிரசவ காலத்தில் கூடிய எடை இப்போதும் கொஞ்சம் இருக்கிறது. அப்போது கூடிய வயிறும், சதைக் கொழுப்பும் இன்னும் இருக்கிறது. தழும்புகளும் உள்ளன. எனது சில பழைய உடைகள் இப்போது கச்சிதமாக இல்லாததைப் பார்க்கும்போது, பெரிய அளவு உடைகள் வாங்கும்போது நானும் சற்று வருத்தப்படுவேன்.

எனது கைக்குக் கீழே தோலின் நிறம் எப்படி இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படமால நான் ஸ்லீவ்லெஸ் உடை அணிகிறேன். நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக்கொள்ள, விரும்ப எனக்குப் பல வருடங்கள் ஆனது. எனது உயரத்தை வைத்துக் கேலி செய்வார்கள் என்பதால் சற்று கூன் போட்டு நடப்பேன். எனது மார்பகங்களின் அளவுகளை மனதில் வைத்து தோளை குறுக்கியே வைப்பேன்.

இது எல்லாம் சேர்ந்து நான் நிற்கும், நடக்கும், உட்காரும் விதத்தில் பல பிரச்சினைகளைத் தந்தன. தொடர் முதுகு வலி, கால் வலியால் அவதிப்பட்டேன். பெண்களே, உங்களை நீங்களே இவ்வளவு வருத்திக் கொள்ளாதீர்கள். பிரசவ காலத்தின்போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல விஷயங்களைக் கடந்து வந்திருக்கிறீர்கள். எனவே பிரசவம் முடிந்து உடனடியாக எடை குறைக்க வேண்டும் என்பதோ, தழும்புகளை மறைய வைக்க வேண்டும் என்பதோ உங்களுக்கு முதன்மையான கவலையாக இருக்கக் கூடாது.

தாயாக இருப்பது எளிதல்ல, ஏன் அந்தத் தழும்புகளை மறைய வைக்க வேண்டும்? போரில் கிடைத்த தழும்புகளை மக்கள் கொண்டாடுவதில்லையா? பின் ஏன் பிரசவத் தழும்புகளைக் கொண்டாடக் கூடாது? எடை குறைந்த பிறகும் ஏன் அந்தத் தழும்புகளை நாம் சுமக்கக் கூடாது? நீங்கள் யார், உங்கள் திறன் என்ன என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தும்.

யாரும், உங்கள் கணவர் கூட உங்கள் உருவத்தைக் கேலி செய்ய விடாதீர்கள். ஏன் உடல் எடையைக் குறைக்கவில்லை, கூட்டவில்லை, மார்பக அளவு, தோலின் நிறம், கருப்பான தொடை, கழுத்து, கைகள் எனப் பல விஷயங்களை வைத்துக் கணவர்களும், அவர் வீட்டு உறவினர்களும் ஒரு பெண்ணைக் கேலி செய்வதைப் பற்றி ஸ்வாதி தனது பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பல பதிவுகளை நான் படித்து வருகிறேன். அப்படிப்பட்டவர்கள் வெட்கப்பட வேண்டும்.

நீங்கள் ஒரு கணவராகவோ, அம்மாவாகவோ, தங்கையாகவோ, மனைவியாகவோ இருந்தால், புதிதாகத் தாயாகி இருக்கும் ஒரு பெண்ணின் நண்பராக, அல்லது உடல் பிரச்சினைகளால் அவதிப்படும் ஒருவரின் நண்பராக இருந்து இதைப் படிக்கிறீர்கள் என்றால், இதுபோன்ற காயப்படுத்தும், உணர்ச்சிகளற்ற வார்த்தைகளைத் தெரிந்தே கூற மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

இது மீண்டும் சரியான நபருடன் இருப்பது, சரியான நபரைத் திருமணம் செய்துகொள்வது என்கிற விஷயத்துக்கு என்னைக் கொண்டு வருகிறது. பெரும்பாலானவர்கள், வயதாகிவிட்டதனாலோ அல்லது திருமண வயது என்பதை எட்டி விட்டதனாலோ திருமணம் செய்துகொள்ள, குழந்தைகள் பெற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

திருமணம், குழந்தைகள் போன்ற விஷயங்கள் நீங்கள் மனதளவில் தயாராக இருந்தால் மட்டுமே நடக்க வேண்டும். நீங்கள் சரியான நபருடன் இருந்தால் அவர் உங்களை ஆதரிப்பார், உங்களுடன் நிற்பார். சரியான நபரை நீங்கள் திருமணம் செய்திருந்தாலே பாதிப் பிரச்சினைகள் இருக்காது. எனவே எச்சரிக்கைகளைப் புறக்கணிக்காதீர்கள், உங்கள் உள்ளுணர்வு சொல்வதைக் கேளுங்கள்.

சுற்றிலும் தரப்படும் அழுத்தம், வயது காரணமாகத் தவறான நபரை மணந்து வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டோ அல்லது விவாகரத்து பெறப் போராடியோ இருக்க விருப்பமா அல்லது தாமதமானாலும் சரியான நபரைக் கண்டுபிடித்து அவருடன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக வாழ விருப்பமா? யோசியுங்கள்".

இவ்வாறு ஸ்ருதி பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்