'அந்தாதூன்' ரீமேக்: இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

'அந்தாதூன்' தமிழ் ரீமேக்கின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் வென்றது.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தியாகராஜன் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார். ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். இதற்காக தன் உடல் எடையைக் குறைத்து தயாராகி வருகிறார்.

'அந்தாதூன்' தமிழ் ரீமேக் அறிவிக்கப்படவுடனே, இசையமைப்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஏனென்றால், 'அந்தாதூன்' கதையில் பியானோ இசை உள்ளிட்டவை கதையுடனே பயணிக்கும். தற்போது இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் படத்துக்காக பல்வேறு பியானோ இசையை உருவாக்கி, பிரசாந்த்துக்கு அனுப்பியுள்ளார் சந்தோஷ் நாராயணன். தற்போது அதை வாசித்து பயிற்சி எடுத்து வருகிறார் பிரசாந்த். மேலும், சில பாடல்களையும் உருவாக்கி முடித்துவிட்டார். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதில் தபு கதாபாத்திரத்தில் நடிக்க சிம்ரன் ஒப்பந்தமாகியுள்ளார். இதர கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE