முதல் பார்வை: தேன்

By க.நாகப்பன்

இயற்கையே அரணாகத் திகழும் மலைக் கிராமத்தில் கார்ப்பரேட் நிறுவனம் கால் பதித்தால், கலப்படம் மிகுந்தால் என்ன ஆகும் என்பதே 'தேன்' படத்தின் கதை.

குரங்கனி மலையை ஒட்டிய குறிஞ்சிக்குடி மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (தருண் குமார்). கொழுக்கு மலையைச் சேர்ந்தவர் பூங்கொடி (அபர்ணதி). பூங்கொடியின் தந்தை கண்ணப்பன் (தேவராஜ்) படுத்த படுக்கையாய்க் கிடக்கிறார். அவர் குணமடைவதற்கு குறிஞ்சித் தேன்தான் மருந்து என்று வைத்தியர் சொல்கிறார். இதனால் மலைத்தேன் எடுப்பதையே தொழிலாகச் செய்யும் வேலுவைச் சந்திக்கிறார் பூங்கொடி. தந்தையின் நிலையைச் சொல்லி மலைத் தேன் கேட்கிறார். வேலுவும் கஷ்டப்பட்டு எடுத்துவந்து கொடுக்கிறார். அந்த உதவியும் அறிமுகமும் அவர்களுக்குள் காதலை ஊற்றெடுக்க வைக்கிறது. பூங்கொடி வேலுவிடம் தன் விருப்பத்தைச் சொல்கிறார். அவர் அப்பாவும் சம்மதிக்கிறார்.

அவர்கள் ஊர் வழக்கப்படி வாழை மட்டையை இரண்டாகப் பிரித்து சாமியிடம் திருமணத்துக்குச் சம்மதம் கேட்கிறார்கள். வாழை மட்டை சரியாகப் பிரியவில்லை. இதனால் சாமி வரம் கொடுக்கவில்லை என்று ஊர்ப் பெரியவர் திருமணத்துக்கு மறுக்கிறார். பூங்கொடியின் அப்பா கண்ணப்பனும் மௌனம் காக்கிறார். வேலுவை மறக்க முடியாத பூங்கொடி தந்தையை, ஊரை, ஏன் சாமியை எதிர்த்துத் திருமணம் செய்துகொள்கிறார். பெண் குழந்தை பிறந்த சில வருடங்களில் தீராத வயிற்றுவலி பூங்கொடியைப் புரட்டி எடுக்கிறது.

மலைக் கிராமத்தில் மட்டுமே இருந்த வேலு, தரைக் காட்டில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அலைகிறார். அரசு அதிகாரிகளின் அலட்சியத்தாலு, எங்கும் நிறைந்த லஞ்சத்தாலும் மனைவிக்கு முறையான சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகிறார். வெள்ளந்தியான வேலு விழித்துக்கொண்டாரா? மனைவியைக் காப்பாற்றினாரா? பூங்கொடிக்கு அப்படி என்னதான் உடல்நலப் பிரச்சினை? சாமியை எதிர்த்துத் திருமணம் புரிந்ததுதான் உடல்நலக் குறைவுக்குக் காரணமா? போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

'தகராறு', 'வீர சிவாஜி' படங்களை இயக்கிய கணேஷ் விநாயக், பெயரில் சிறு மாற்றத்துடன் (கணேஷ் விநாயகன்) இப்படத்தை இயக்கியுள்ளார். கமர்ஷியல் படங்களின் மூலம் கால் பதித்தவர் தற்போது விருது பெறும் நோக்கத்துடன் விரும்பி இயக்கியுள்ளார். அவரின் முயற்சி முழுமையடையவில்லை என்பதுதான் வருத்தம்.

'காளை', 'குங்கமப்பூவும் கொஞ்சும் புறாவும்', 'ஆண்மை தவறேல்', 'மார்க்கண்டேயன்', 'தகராறு' என்று அரை டஜன் படங்களுக்கு மேல் எதிர் நாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்த தருண் சத்ரியா தற்போது தருண் குமாராய் மாறி நாயகனாக புரமோஷன் ஆகியுள்ளார். மலைக் கிராமத்து மனிதனைக் கண்முன் நிறுத்தும் வெள்ளந்தியான வேலு கதாபாத்திரத்தில் சரியாகப் பொருந்துகிறார். மலையைக் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம், அரசு அதிகாரிகளிடம் மலையின் முக்கியத்துவத்தைச் சொல்லி முரண்டு பிடிப்பது, மனைவியின் உடல்நிலையை உணர்ந்து அதே அரசு அதிகாரிகளிடம் சிகிச்சைக்காக கெஞ்சி மருகுவது, அறியாமை, அன்பு, ஆதங்கம், அப்பாவித்தனம் என அத்தனையிலும் அசத்துகிறார்.

''நான் மனைவி மாதிரி இல்ல... அந்த மலை மாதிரி உன்னை நல்லா பார்த்துப்பேன்''னு காதலைச் சொல்லும் விதத்திலேயே கவர்கிறார் அபர்ணதி.' எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சி மீடியா வெளிச்சத்துக்கு வந்தவர், 'ஜெயில்' படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்திருப்பவர் இப்படத்தில் மலைக்கிராமத்து பூங்கொடியாகவே மாறிப் போய் அச்சு அசல் நடிப்பை வழங்கியுள்ளார். இனிவரும் படங்களில் அவருக்கான வாய்ப்புகள் பிரகாசம்.

வாய் பேசாமல் மௌனத்தாலும், சில சப்தங்களாலும் அனுஸ்ரீ பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார். அதுவும் காசு இல்லாத கையறு நிலையில் அக்குழந்தையின் நடிப்பு கலங்க வைக்கிறது.

50க்கும் மேற்பட்ட படங்களில் அடையாளம் பதித்த 'யோகி' தேவராஜ் நாயகியின் தந்தையாக சில காட்சிகளில் மட்டும் வருகிறார். அதற்குப் பிறகு காணாமல் போகிறார். பாவா லக்‌ஷ்மணன், அருள்தாஸ் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள். கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்துள்ளனர்.

மலையைப் பின்னணியாகக் கொண்ட படம் என்றாலே, படக்குழுவினர் கண்ணை மூடிக்கொண்டு 'மைனா' சுகுமாரைக் கூட்டிச் சென்றுவிடுகிறார்கள் போல. அவரும் அருவியின் ஆர்ப்பரிப்பு, இயற்கை எழில் கொஞ்சும் மலையின் அழகைக் களத்தின் தேவைக்கு அதிகமாகவே அழகாகக் காட்டியுள்ளார். சனந்த் பரத்வாஜியின் இசையும் பின்னணியும், லாரன்ஸ் கிஷோரின் எடிட்டிங்கும் படத்துக்குக் கூடுதல் வலு சேர்க்கின்றன.

'மேற்குத்தொடர்ச்சி மலை'யில் கவனம் ஈர்த்த ராசி தங்கதுரை இதிலும் தனித்துவ வசனங்களால் ஈர்க்கிறார். மருத்துவமனைக் காட்சியில் தருண்- அபர்ணதி பேசும், 'ஒரு வார்த்தை மெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்... தீன்னு சொன்னா சுட்டுடுமா' என்ற வசனம் மட்டும் உறுத்தல்.

கதைக்களம் மிக எளிதானது. முதல் பாதி முழுக்க எந்த நெகட்டிவ் மனிதர்களையும் காட்சிப்படுத்தாதது ஆச்சரியம். இவ்வளவு அழகான மலைக்கிராமமா என்று மலைக்க வைக்கிறது. குரங்கணி தீ விபத்து, ஜெயலலிதா காலண்டர், காப்பீடு அட்டை போன்ற சில விஷயங்களின் மூலமே கதையின் காலகட்டத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது. இயற்கையையே பேராற்றல் என்று வணங்கும் மக்களின் நம்பிக்கையையும், அவர்களின் வாழ்வியலையும் பதிவு செய்த விதம் நேர்த்தி.

மக்கள் பேசும் மொழி மதுரை வட்டார மொழியாகவே இருக்கிறது. மலைக்கிராம மக்களின் மொழியாக இல்லாதது குறை. இரண்டாம் பாதியில் சில சறுக்கல்கள். தன்னை எதிர்த்துக் கொண்டு போனதற்காக மகள் எப்படி இருக்கிறார் என்று கூட பார்க்காமல் தந்தை தனித்தே இருந்துவிடுவாரா, அவர் என்ன ஆனார், கார்ப்பரேட் நிறுவனம் எப்போது எங்கு கால் பதித்தது, குடித் தலைவரிடம் தருண் எதையும் சொல்லாமல் இருப்பது ஏன், மருத்துவமனையில் அல்லாடும்போதும் தருண் குடும்பத்தினரை அந்த மலைக் கிராமம் கண்டுகொள்ளாதது ஏன் எனப் பல கேள்விகள் எழுகின்றன. இதற்கு நம்பும்படியான பதில்கள் இல்லை.

அருள்தாஸ் கதாபாத்திரத்தை முன்கூட்டியே கணித்துவிடுவது திரைக்கதையின் பலவீனம். ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தையிலேயே அவர் தனக்கானதைச் சாதிப்பதும் செயற்கையின் உச்சம்.

களம், கதாபாத்திரத் தேர்வில் கவனம் செலுத்திய இயக்குநர் கணேஷ் விநாயகன் கதையில் கோட்டை விட்டுவிட்டார் என்பதுதான் கவலை அளிக்கிறது. அரசு அதிகாரிகளின் அலட்சியம், பண மதிப்பிழப்பை சுருக்கென வசனத்திலேயே உணர்த்துவது, கார்ப்பரேட் அரசியல், இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது, நான்குபேரின் சுயநலப் பசிக்கு மலைக்கிராமங்கள் வேட்டையாடப்படுவது, லஞ்சத்தால் பாழ்படும் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை உலுக்கி எடுக்கும் உருக்கத்துடன் காட்சிப்படுத்தவில்லை. தருண்- அபர்ணதி காதலை அழுத்தமாகச் சொல்லாததால் பின்னுள்ள காட்சிகளும் பெரிய அளவில் எடுபடவில்லை.

திரைக்கதையில் மட்டும் கனம் சேர்த்திருந்தால் கலப்படமில்லாத தூய்மையான தேனாக இப்படம் காலம் கடந்தும் ருசித்திருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE