ராவணன் குறித்த சர்ச்சை கருத்து: சைஃப் அலி கான் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள படம் 'ஆதிபுருஷ்'. இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பைத் தொடங்கி, ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்குத் தகுந்தாற் போல் நடிகர்களை ஒப்பந்தம் செய்து வருகிறது. இப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலிகான் நடிக்கவுள்ளார்.

'ஆதிபுருஷ்' திரைப்படம் ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராமராக பிரபாஸ் நடிக்க, ராவணனாக சைஃப் அலி கான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் செய்தி நிறுவனத்துக்கு சைஃப் அலி கான் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் ராவணனின் நல்ல பக்கத்தை காட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். சைஃப் அலி கானின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தனது கருத்துக்கு சைஃப் அலி கான் மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் வழக்கறிஞர் ஹிமான்ஷு ஸ்ரீவத்சவா என்பவர் சைஃப் அலி கான் மீது உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அவர் சைஃப் அலி கான் இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராக பேசியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு வரும் 23ஆம் தேதி அன்று விசாரணைக்கு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE