சிவன் கோவில் பூசாரிக்கு வீடு கட்ட உதவிய ஃபர்ஹான் அக்தர்

இடிந்த வீட்டை சரி செய்ய முடியாமல் கஷ்டப்பட்ட சிவன் கோவில் பூசாரி ஒருவருக்கு மீண்டும் வீடு கட்டித் தர நடிகர் ஃபர்ஹான் அக்தர் உதவி செய்துள்ளார்.

வாரணாசியைச் சேர்ந்த ஹோப் நல அறக்கட்டளை செயல்படுகிறது. இது கிராமப்புற மக்களின் வாழ்வில் மாற்றம் கொண்டு வரும் நோக்கத்துடன் செயல்படுகிறது. சிவன் கோவில் பூசாரி ஒருவரது வீடு சிதிலமடைந்ததாகவும், அதை சரி செய்யக் கூட வழியில்லாத நிலையில் குளிர் காலத்தில் அவர் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் அவரது வீட்டை சரி செய்து கட்டித் தர ஹோப் அறக்கட்டளை சார்பில் முயற்சி செய்யப்பட்டது. இதற்காக பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தரிடம் உதவிக் கோரப்பட்டது. அவரும் பூசாரியின் வீட்டைக் கட்டித் தர முழுமையாக உதவியிருக்கிறார்.

தற்போது இது குறித்து பகிர்ந்துள்ள திவ்யான்ஷு, "எங்களது அழைப்புக்குச் செவி மடுத்து, வீடின்றி தவித்த சிவன் கோவில் பூசாரியின் வீட்டைக் கட்டித்தர முழுமையாக பொறுப்பேற்றுக் கொண்ட ஃபர்ஹான் அக்தர் அவர்களுக்கு நன்றி. கட்டுமானம் குறித்து அடிக்கடி எங்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட உங்களது அர்ப்பணிப்பைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்பட்டுப் பொபொனோம். இனி அந்தக் குடும்பத்தினர் யாரும் குளிரில், வெளியே உறங்க மாட்டார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த வீடு கட்டப்பட்ட காணொலியையும் பகிர்ந்துள்ளார். இதில் ஃபர்ஹான் அக்தர் பூசாரியின் குடும்பத்தினருடன் மொபைல் அழைப்பில் உரையாடிய காணோலியும் இடம்பெற்றுள்ளது. இது குறித்து இதுவரை ஃபர்ஹான் அக்தர் எங்கும் பகிரவில்லை என்பதால் அவரது ரசிகர்களுக்கு இந்தத் தகவல் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. பலரும் ஃபர்ஹானைப் பாராட்டி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE