கோவிட்-19 சிகிச்சைக்காக 500 ரெம்டெஸிவியர் ஊசிகள்: தொடரும் ஷாரூக் கான் உதவி

By செய்திப்பிரிவு

கோவிட்-19 சிகிச்சைக்காக ரெம்டெஸிவியர் என்ற மருந்து கொண்ட 500 ஊசிகளை நடிகர் ஷாரூக் கான் இலவசமாக வாங்கிக் கொடுத்துள்ளார். இது குறித்து டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ட்வீட் செய்துள்ளார்.

மார்ச் மாத ஊரடங்கிலிருந்து கோவிட்-19 தொற்றை எதிர்த்து நாடே போராடிக்கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்களுக்கும் களத்திலிருந்து சேவை செய்யும் மருத்துவப் பணியாளர்களுக்கும் உதவ பல்வேறு பிரபலங்கள் முன்வந்துள்ளனர்.

ஏற்கனவே கோவிட்-19 நிவாரணத்துக்காக தன் பங்காகவும், தனது நிறுவனங்களின் பங்காகவும் பல்வேறு வகையான நிதியுதவிகளை நடிகர் ஷாரூக் கான் அறிவித்திருந்தார். மேலும் மகாராஷ்டிர மாநிலத்தின் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்களுக்கு 25,000 பிபிஇ கிட் எனப்படும் பாதுகாப்பு உபரகணங்களை அளித்துள்ளார். கடந்த மாதம் கேரள மாநிலத்துக்கு 20,000 என் - 95 முகக் கவசங்களை அளித்தார்.

இதைத் தவிர ஷாரூக் கானின் 4 மாடி அலுவலகக் கட்டிடம் அலுவலகம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக மொத்தமாக மாற்றப்பட்டது. இப்படித் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வந்த ஷாரூக் கான் தற்போது கோவிட்-19 சிகிச்சைக்கு முதன் முதலில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரெம்டெஸிவியர் என்கிற மருந்து கொண்ட 500 ஊசிகளை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த ஊசி ஒவ்வொன்றும் ரூ.2,500லிருந்து ரூ.5,000 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஷாரூக் கானின் இந்த உதவி குறித்து டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், தனது ட்விட்டர் பக்கத்தில், "அதிகமான தேவை இருந்த நேரத்தில் 500 ரெம்டெஸிவியர் ஊசிகளை தானமாக் அளித்த திரு ஷாரூக் கான் மற்றும் மீர் அறக்கட்டளைக்கு நாங்கள் நன்றி கூறிக்கொள்கிறோம். நெருக்கடி நேரத்தில் நீங்கள் தந்த ஆதரவுக்கு நாங்கள் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்" என்று பகிர்ந்துள்ளார்.


இதற்கு பதிலளித்த ஷாரூக் கான், "மீர் அறக்கட்டளைக்கு நீங்கள் கூறிய பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி சத்யேந்தர் ஜெயின் அவர்களே. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் களத்தில் நின்றால் தான் இந்த நெருக்கடியைத் தாண்டி வர முடியும். நானும் எனது அணியும், எதிர்காலத்தில் உதவவும் காத்திருக்கிறோம். நீங்கள் செய்து வரும் அத்தனை சேவைக்கும் உங்களுக்கும் உங்கள் அணிக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE