ட்ரெய்லர் காட்சி சர்ச்சை: இந்திய விமானப் படையிடம் மன்னிப்பு கேட்ட அனில் கபூர்

By ஐஏஎன்எஸ்

இந்திய விமானப் படையின் உணர்வுகளை உள்நோக்கமின்றிப் புண்படுத்தி விட்டதாக நடிகர் அனில் கபூர் மன்னிப்பு கோரியுள்ளார்.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 'ஏகே வெர்சஸ் ஏகே' (AK vs AK) என்கிற திரைப்படம் நேரடியாக வெளியாகவுள்ளது. ஒரு கடுமையான இயக்குநர், நடிகர் ஒருவரின் மகளைக் கடத்தி மிரட்டுகிறார். அந்த நடிகர் தானே எப்படித் தன் மகளைத் தேடிப் பிடிக்கிறார் என்பதே கதை. இதில் நடிகராக அனில் கபூரும், இயக்குநர் கதாபாத்திரத்தில் அனுராக்கும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. இதில் அனில் கபூர் கதாபாத்திரம், இந்திய விமானப் படையின் சீருடையை அணிந்து கெட்ட வார்த்தை பேசுவதுபோல காட்சி வைக்கப்பட்டிருந்தது.

இதைக் கண்டித்து இந்திய விமானப் படையின் அதிகாரபூர்வ ட்விடர் பக்கத்தில், "இந்தக் காணொலியில் அணியப்பட்டுள்ள சீருடை தவறானது. வார்த்தைகள் முறையற்றவை. இந்திய விமானப் படை வீரர்களின் நடத்தையை இது எந்த விதத்திலும் குறிக்காது. குறிப்பிட்ட காட்சிகள் நீக்கப்பட வேண்டும்" என்று ட்வீட் செய்யப்பட்டிருந்தது.

நெட்ஃபிளிக்ஸ், அனுராக் ஆகியோரும் இந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இதைத் தொடர்ந்து அனில் கபூர் காணொலி ஒன்றைப் பகிர்ந்திருள்ளார். இதில், "எனது புதிய திரைப்படமான 'ஏகே வெர்சஸ் ஏகே'வின் ட்ரெய்லர் ஒரு சிலரைப் புண்படுத்தியிருப்பதாக அறிகிறேன். (ட்ரெய்லரில்) விமானப் படையின் சீருடையை அணிந்து தவறான வார்த்தைகளைப் பேசியிருந்தேன். நோக்கமின்றி உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அந்தக் காட்சி ஏன் அப்படி அமைக்கப்பட்டுள்ளது என்பதை நான் விளக்க விரும்புகிறேன். படத்தில் அந்தக் கதாபாத்திரமும் ஒரு நடிகர். அவர் அதிகாரி வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது தனது மகள் கடத்தப்பட்டதை அறிகிறார். எனவே ஒரு தந்தையின் கோபத்தை, உணர்ச்சிகளை அவர் வெளிப்படுத்துகிறார். காணாமல்போன தனது மகளைத் தேடும் பயணத்தில் அவர் அந்தச் சீருடையை அணிந்திருப்பது கதைக்குச் சரியாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் மட்டுமே.

இந்திய விமானப் படையை அவமதிக்க வேண்டும் என்று நானோ, இயக்குநரோ நினைத்ததே இல்லை. நமது அத்தனை வீரர்களின் தன்னலமற்ற சேவையின் மீது எனக்கு என்றுமே மரியாதையும், நன்றியும் இருந்திருக்கிறது. எனவே எந்தவித நோக்கமுமின்றி எவருடைய உணர்வுகளைப் புண்படுத்தியிருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று பேசியுள்ளார்.

நெட்ஃபிளிக்ஸ் தரப்பும் மன்னிப்பு கோரியுள்ளது. ஆயுதப்படை வீரர்கள் யாரையும் அவமதிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும், படத்தில் எதுவும் விமானப் படையையோ, ஆயுதப்படையையோ குறிக்காது என்றும், தேசத்தைப் பாதுகாக்கும் துணிச்சலானவர்கள் மீது தங்களுக்கு என்றுமே உயர்ந்த மரியாதை இருக்கிறது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE