'சூரரைப் போற்று', 'அந்தகாரம்' படங்களில் ரசித்த அம்சங்கள்: ஷங்கர் ட்வீட்

சமீபத்தில் வெளியான படங்களில் தனக்குப் பிடித்த அம்சங்கள் குறித்து ட்வீட் செய்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.

கமல் நடிப்பில் உருவாகும் 'இந்தியன் 2' படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் கமலுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

'இந்தியன் 2' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு கரோனா அச்சுறுத்தலால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர், தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதிய படங்களைப் பார்த்து அதில் மிகவும் பிடிக்கும் படங்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிப்பார்.

தற்போது சமீபத்தில் ரசித்த படங்கள் குறித்து இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"சமீபத்தில் ரசித்தவை:

'சூரரைப் போற்று' திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷின் ஆத்மார்த்தமான இசை. 'அந்தகாரம்' படத்தில் எட்வின் சகாயின் அற்புதமான ஒளிப்பதிவு. மலையாளத் திரைப்படமான 'ஜல்லிக்கட்டு' படத்தில் பிரசாந்த் பிள்ளையின் குறிப்பிடத்தக்க வித்தியாசமான பின்னணி இசை".

இவ்வாறு இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE