‘நிறம் மாறாத பூக்கள்’ படத்திற்கு கமல், ரஜினி, ஸ்ரீதேவி என்றுதான் நினைத்திருந்தேன். அது நடக்கவில்லை. ஒருபடத்துக்கு ஒரே நாளில் கம்போஸ் செய்துவிடுவான் இளையராஜா. அவ்வளவு மளமளவென டியூன் வந்துகொண்டே இருக்கும் அவனிடம்’ என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.
இயக்குநர் பாரதிராஜா, ’என் இனிய தமிழ் மக்களே’ எனும் இணையதள சேனலில் தன் திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.
அதில் அவர் ‘நிறம் மாறாத பூக்கள்’ படம் குறித்து தெரிவித்தார்.
அதில் அவர் தெரிவித்ததாவது :
’நிறம் மாறாத பூக்கள்’ படத்தை லேனா புரொடக்ஷன்ஸ் செட்டியாருக்கு செய்து கொடுத்தேன். இந்தப் படத்தை புது லொகேஷனில் எடுப்பதற்கு ஆசைப்பட்டேன். ஆகவே சிலோன் போகலாம் என்று முடிவு செய்தேன். ராதிகாவின் அம்மாவுக்கு சிலோன் நன்றாகவே தெரியும். அதனால், நான், ராதிகா, அவரின் அம்மா மூவரும் சிலோன் சென்றோம்.
அற்புதமான பூமி அது. எங்கு பார்த்தாலும் அருவியைப் பார்க்கலாம். இருபது முப்பது அருவிகளைப் பார்த்தேன். மலை, இயற்கை, பசுமை என அவ்வளவு ரம்மியமாக இருந்தது. சிலோன் போய், லொகேஷனெல்லாம் பார்த்துவிட்டு வந்ததும், சட்டென்று என் யோசனை மாறிப்போனது. இங்கேயே, சென்னையிலும் கொடைக்கானலிலுமாக படம் எடுப்பது என்று முடிவு செய்தேன்.
‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தில், சுதாகர், ராதிகா, விஜயன் நடித்திருந்தார்கள். ஆனால், முதலில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி முதலானோர் நடிப்பதாகத்தான் இருந்தது. அப்போது கமல் நன்றாக வளர்ந்திருந்தார். ஸ்ரீதேவியும் பிஸி நடிகையாகிவிட்டார். ரஜினிகாந்த் வளர்ந்துகொண்டிருந்தார். இந்தக் காரணங்களால் அவர்களை ஒருங்கிணைப்பதில் சிக்கல் இருந்தது. அதனால் அவர்களை வைத்து படமெடுக்க வேண்டும் என்பதை விட்டுவிட்டேன்.
புதுமுகங்களையே போட்டு எடுப்போம் என்று முடிவு செய்தேன். சுதாகரையும் ராதிகாவையும் தேர்வு செய்தேன். இன்னொரு ஹீரோவுக்கு விஜயனை ஓகே செய்தேன். விஜயன் என் உதவி டைரக்டர். ஏற்கெனவே, ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் பட்டாளத்தான் கேரக்டருக்கு விஜயனுக்கு வாய்ப்பு கொடுத்தேன். ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்திலும் ஒரு வாய்ப்பு கொடுத்தேன்.
படம் கொஞ்சம் எடுத்திருந்த நிலையில், ரஷ் போட்டுப் பார்த்தோம். என் உதவியாளர்கள் பலரும், ‘ஏன் சார் விஜயனைப் போட்டீங்க. நல்லாவே இல்ல சார்’ என்றார்கள். ஆனால் எனக்கு விஜயன் நடித்தால்தான் சரியாக இருக்கும் என்று தோன்றியது. விஜயனின் பார்வையும் தலைமுடியும் அது கலைந்திருப்பதும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் எனக்கு ஒரு குடிகாரனைப் போலவே, காதல் தோல்வியில் இருப்பதைப் போலவே விஜயன் இருந்தான்.
‘நிறம் மாறாத பூக்கள்’ பற்றிச் சொல்லும்போது, கவியரசரைப் பற்றிச் சொல்லவேண்டும். அவரைப் பற்றி நிறையவே சொல்லியிருக்கிறேன். இருந்தாலும் சொல்லிக்கொண்டே இருக்கலாம், கவியரசரை.
ஒருநாள்... விஜிபியில் கவியரசருக்காக காத்திருந்தோம். கவிஞர் வந்தார். படத்தின் மொத்தக் கதையையும் சொல்லியிருந்தேன். பாடலுக்கான சூழலுக்கான விளக்கத்தைச் சொன்னேன் .இளையராஜாவும் அப்படித்தான். மளமளவென டியூன் போட்டுவிடுவான். ஒரு படத்துக்கு ஐந்து பாட்டு என்றால், ஐந்து பாடலையும் ஒரேநாளில் கம்போஸ் செய்துவிடுவான் இளையராஜா. ஐந்து பாடல்களும் பிரமாதமாக இருக்கும்.
கவியரசர் வந்து சிகரெட்டை பற்றவைத்தார். சூழலை விளக்கினேன். அப்படியா என்றார். அவ்ளோதானே என்றார். ‘இரு பறவைகள் மலை முழுவதும் இங்கும் அங்கும் பறந்தன. திரிந்தன’ என்று டக்கென்று சொன்னார். ‘என்னடா இது, நம்ம பாட்டுதானே கேட்டோம். ஆனா வசனம் போல ஏதோ சொல்றாரே’ என்று எனக்கு யோசனை. ஆனால் அந்த வரிகள் அப்படியே மெட்டுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டன.
இந்த உலகத்திலேயே கண்ணதாசனைப் போல் ஒரு கவிஞரைப் பார்க்கவே முடியாது.
சென்னையில் எடுத்தோம். பிறகு கொடைக்கானலில் எடுத்தோம். பக்கத்தில்தான் என்னுடைய ஊர். ரொம்ப நல்ல அனுபவமாக இருந்தது. அதேசமயத்தில் சில பிரச்சினைகள். அதையெல்லாம் கடந்துதான் படத்தை எடுத்து முடித்தேன்.
படத்தை முழுமையாகப் போட்டுப் பார்த்தோம். ‘சார், விஜயன் பிரமாதமாப் பண்ணிருக்கார் சார்’ என்றார்கள். அட்டகாசமான காதல் கதையாக வந்து, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது ‘நிறம் மாறாத பூக்கள்’.
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
21 mins ago
சினிமா
57 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago