பண்ணைபுரத்து கங்கை அமரன்!  - கங்கை அமரன் பிறந்தநாள் ஸ்பெஷல்

By வி. ராம்ஜி

’’நிறையபேர் அண்ணன் போட்ட மெட்டுகளை வைத்துக்கொண்டு தன்னை இசையமைப்பாளர் என்று காட்டிக் கொண்டார்’ என்றெல்லாம் சொல்லலாம். உண்மையில், அண்ணனைப் போலவே இந்தத் தம்பியும் மிகச்சிறந்த இசையமைப்பாளர். எத்தனையோ பாடல்களுக்கு அவரின் இசையில் நான் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்... ‘நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா’ என்ற பாடல். அந்த அளவுக்கு இசை ஞானம் உள்ளவர். அண்ணன் இளையராஜாவைப் போலவே, மிகச்சிறந்த கெட்டிக்காரர் கங்கை அமரன். எனக்கும் சகோதரரைப் போன்றவர்’’ என்று இன்றைக்கும் என்றைக்கும் நம் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் எஸ்.பி.பி. கங்கை அமரன் குறித்து தெரிவித்துள்ளார்.

‘’ஒருத்தர்கிட்ட எல்லாத் திறமையும் இருக்கறது ரொம்பப் பெரிய விஷயம். என்னோட முதல் படத்துக்கு கங்கை அமரன் தான் இசையமைச்சார். மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘மெளன கீதங்கள்’ படத்துக்கும் அவர்தான் இசை. பாட்டெல்லாம் அவ்ளோ பிரமாதமா எழுதுவார். இசையமைப்பார். பாடுவார். இயக்குவார். இப்படி எல்லாத்துறையிலயும் இல்லாம, ஒரேயொரு துறைல மட்டும் கவனம் செலுத்தியிருந்தா, கங்கை அமரன் மிகப்பெரிய உயரத்துக்குப் போயிருப்பார். அந்த அளவுக்கு திறமைசாலி கங்கை அமரன்’’ என்று நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

பிடித்த இசையமைப்பாளர் என்றொருவர் இருக்கலாம். அதேபோல் பாடலாசிரியர் என்று ஒருவர் இருக்கலாம். பாடகராகவும் சிலர் மனதில் இடம்பிடிக்கலாம். இயக்குநராகவும் சிலர் மனதில் பதிந்துவிடுவார்கள். கங்கை அமரன் முதலில் பாட்டு எழுதினார். பிறகு இசையமைத்தார். அதையடுத்து பாடவும் செய்தார். பின்னர், படத்தை இயக்கினார். இப்படி பன்முகங்கள் கொண்ட கலைஞனாக பேரும் புகழும் பெற்றவர் கங்கை அமரன். இந்தப் பண்ணைபுரம் எக்ஸ்பிரஸ் பல வடிவங்களில், பல வண்டிகளில் பயணித்தது... தமிழ் சினிமாவின் ஆச்சரியங்களில் ஒன்று.

பாரதிராஜா, இளையராஜா, கங்கை அமரன் எல்லோரும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே பழக்கம். ‘அன்னக்கிளி’யில் இளையராஜா வந்தார். கூடவே அமர்சிங் என்று அழைக்கப்பட்ட அமர் என்று நெருக்கமானவர்கள் அழைக்கிற கங்கை அமரனும் வந்தார்.

‘16 வயதினிலே’ மூலம் பாரதிராஜா புதியதொரு பாதையைத் திறந்து வைத்தார் திரையுலகிற்கு. திரையுலகில் மட்டுமின்றி கங்கை அமரனுக்கும் அங்கே ஒரு வாசல் திறக்கப்பட்டது. கங்கை அமரனுக்குப் பாட்டெழுத வாய்ப்பு கொடுத்தார் பாரதிராஜா. அந்தப் பாட்டு விருதுக்குரிய பாடலாக அமைந்தது. பாடகிக்கு விருது கிடைத்தது. அந்தப் பாடல் இன்றைக்கும் நம் நெஞ்சங்களில் பூத்துக்குலுங்கி கொண்டிருக்கிறது. அந்தப் பாடல்... ‘செந்தூரப்பூவே... செந்தூரப்பூவே’. அப்போதிருந்தே கங்கை அமரனுக்கு குவியத் தொடங்கின பாராட்டுப் பூக்கள்.

மீண்டும் இன்னொரு வாய்ப்பு. பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’. மயிலுக்கு செந்தூரப்பூவை வழங்கிய கங்கை அமரன், ரயிலுக்கு ‘பூவரசம்பூ பூத்தாச்சு’ என்று சேதி சொன்னார்.

பாடலாசிரியர் என்று கங்கை அமரன் மீது முத்திரை பதிந்திருந்த வேளையில்தான்... எம்.ஏ.காஜாவின் ‘‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’க்கு இசையமைத்தார். ’விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று’ என்ற பாடலில் சோகம் குழைத்துக் கொடுத்தார். ‘நாயகன் அவன் ஒருபுறம்’ என்ற பாடல், காதல் இழைத்துக் கொடுத்தார். முன்னது எஸ்.பி.பி. பின்னது கே.ஜே.ஜேசுதாஸ். இரண்டுமே இன்றைக்கு வரை ஹிட் லிஸ்ட் பாடல்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

முக்கியமாக, பாக்யராஜின் முதல் படமான ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்துக்கு கங்கை அமரன் இசையமைத்தார். ‘காதல் வைபோகமே’ இன்றைக்கும் எங்கு ஒலித்தாலும் நின்று கேட்கும் கூட்டம் உண்டு. இப்படித்தான், ‘மலர்களே மலருங்கள்’ என்ற படம். ஓடவில்லை. ஆனால் இந்தப் படத்தின் ‘இசைக்கவோ நம் கல்யாண ராகம்’ என்ற பாடல், ஜெயச்சந்திரன் குரலில் அமைந்த பாடலை தன் இசையால் ஹிட்டாக்கினார் கங்கை அமரன்.

மீண்டும் பாக்யராஜுடன் ‘மெளன கீதங்கள்’ படத்தில் இசையமைத்தார். ’மூக்குத்திப்பூ’வுடன் வந்தார். இப்படியாக தொடர்ந்து பாட்டெழுதிக் கொண்டும் படங்களுக்கு இசையமைத்தும் வலம் வந்தார் கங்கை அமரன். நடுநடுவே பாடல்களையும் பாடிக்கொண்டிருந்தார்.

எம்.ஏ.காஜா, பாக்யராஜ், ராம.நாராயணன் முதலானோர் உள்ளிட்டோரின் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். பாடல்கள் எழுதியது ஒருபக்கம், இசையமைத்தது ஒரு பக்கம், பாடியது ஒருபக்கம் என்றிருக்கும் போது, இடையே டப்பிங்கும் பேசினார். ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் பாக்யராஜுக்கு குரல் கொடுத்தது இவர்தான் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. ‘பாமா ருக்மணி’ முதலான சில படங்களுக்கு கங்கை அமரன் குரல் கொடுத்தார். ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் பாக்யராஜ் நடித்த வாத்தியார் கேரக்டருக்கு முதலில் கங்கை அமரனுக்குத்தான் டெஸ்ட் எடுக்கப்பட்டதாம். ஒருவேளை, வாத்தியார் பாஸ் மார்க் வாங்கியிருந்தால், நடிகர் கங்கை அமரனாகவும் ஒரு ரவுண்டு வந்திருப்பாரோ என்னவோ?

அதையடுத்துதான் நடிக்க வைக்கிற வாய்ப்பும் வந்தது. அண்ணன் இளையராஜா தயாரித்து இசையமைக்க, ‘கோழி கூவுது’ படத்தை இயக்கினார். பல ஊர்களில் சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. சில ஊர்களில் 250 நாட்களைக் கடந்தும் ஓடியது. நாயகி விஜி, ‘கோழி கூவுது’ விஜி என்றே சொல்லப்பட்டார். ‘சங்கிலி’ படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் பிரபுவுக்கு முதல் வெற்றி... செம பிரேக் இந்தப் படம்தான். கேரக்டர் நடிகையாக சில்க் ஸ்மிதா கொண்டாடப்பட்டார். ‘தம்பி ராமகிருஷ்ணா...’ என்று தொடங்கி வருகிற ‘பூவே இளைய பூவே’வும் ‘ஏதோ மோகம் ஏதோ தாகம்’ பாடலும் முக்கியமாக... ‘அண்ணே அண்ணே... சிப்பாயண்ணே’ பாடலும் இன்றைக்கு கேட்டாலும் புதுப்பட பாடல்களாக நம் மனம் மயக்கும்.

பிரபுவைப் போலவே ராமராஜனுக்கும் அப்படியொரு அட்டகாச படத்தைக் கொடுத்தார். சங்கிலி முருகன் தயாரிப்பில் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ அதிரிபுதிரி ஹிட்டடித்தது. இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் பாடிய மனோவுக்கும் அதுவொரு சூப்பர் ஆரம்பமாகவே அமைந்தது. நிஷாந்தியும் கவனம் ஈர்த்தார்.

‘சிறுபொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்’ என்றும் எழுதினார். ‘சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு’ என்றும் எழுதினார். ‘பூத்துப்பூத்துக் குலுங்குதடி பூவு’ என்றும் ‘அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்’ என்றும் ’என் இனிய பொன்நிலாவே’ என்றும் எழுதினார். இப்படித்தான் என்றில்லாமல் எப்படியும் எழுதினார். ‘அட கங்கை அமரனா இந்தப் பாட்டு எழுதியது’ என்று வியக்கிற அவரின் பாடல்கள் லிஸ்ட் ரொம்பவே நீளம்.

அதேபோல்தான் இசையும். ‘சட்டம் ‘ படத்திற்கும் ‘வாழ்வே மாயம்’ படத்திற்கும் இவரின் இசை, தனியே தெரிந்தது. வெற்றிக்கு இசையும் காரணமாக அமைந்தது. ‘வா வா என் வீணையே’ பாடலும் ‘அம்மம்மா சரணம் சரணம்’ பாடலும் ‘நண்பனே எனது உயிர் நண்பனே’, ‘நான் தான் ராஜா’ பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. ‘தேவி ஸ்ரீதேவி’யும் ‘மழைக்கால மேகம் ஒன்று’ம், ‘நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா’வும், ’வந்தனம் என் வந்தனம்’ பாடலும் ‘வாழ்வே மாயம் இது வாழ்வே மாயம்’ பாடலும் அடைந்த வெற்றியும் ரசிகர்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம், இன்றைக்கும் மாறாமல் அப்படியே!

கங்கை அமரன் இயக்கிய ‘கும்பக்கரை தங்கையா’வும் ‘சின்னவர்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

முக்கியமாக, ‘கரகாட்டக்காரன்’. சாதாரண கதை. அதைச் சொல்ல தெளிவான திரைக்கதை. அந்தத் திரைக்கதைக்குள் மெல்லிய காதல், தடாலடி நகைச்சுவை. எட்டுத்திக்கும் கொண்டு சேர்க்கும் பாடல்கள். சிட்டி, பட்டி, தொட்டி என எங்கும் பிரமாண்ட வெற்றியைப் பெற்ற ‘கரகாட்டக்காரன்’ படத்தின் இயக்குநரான கங்கை அமரனை மறக்கவே மறக்காமல் குறித்து வைத்துக்கொண்டிருக்கிறது காலம். ரசிகர்களும்தான்!

கங்கை அமரன் படங்களில் ஒரு கதை இருக்கும். அந்தக் கதையை ரசிகர்களுக்கு புரிய வைப்பதற்கான எளிய திரைக்கதை இருக்கும். அவற்றுக்குள்ளே காமெடியும் செண்டிமெண்ட்டும் இருக்கும். முக்கியமாக, பாடல்கள் பட்டையைக் கிளப்பும். அதேபோல், இவர் படங்களுக்கான லொகேஷனும் கண்ணுக்குக் குளுமையாக இருக்கும்.
ஒரு தலைமுறை கடந்தும் கூட ‘கரகாட்டக்காரன்’, இன்றைய தலைமுறைக்கும் தெரிந்திருக்கிறான். ‘மாங்குயிலே பூங்குயிலே’ என்று பாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ‘ஊருவிட்டு ஊருவந்து’ என்று கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள். வாழைப்பழ காமெடிக்கு இன்னும் வயதும் ஏறவில்லை; மவுசும் குறையவில்லை. அந்த சொப்பனசுந்தரி என்று சொல்லும்போதே வெடித்துச் சிரிக்கிறது ரசிகர் கூட்டம்!

நிகழ்ச்சியில் கங்கை அமரன் இருக்கிறார் என்றால்... மேடையில் அவர் மைக் பிடிக்கிறார் என்றால்... அங்கே இரண்டு விஷயங்கள் இருக்கும். ஒன்று... அந்த ஏரியாவையே கலகலப்பாக்க்கி, கிச்சுகிச்சு மூட்டிவிடுவதில் குறும்புக்காரர். அதேபோல், ஒளிவின்றி மறைவுமின்றி உண்மைகளைப் போட்டும் உடைத்துவிடுவார். அத்தனை யதார்த்தவாதி.

இந்த கலகலப் பேச்சும் யதார்த்தமும்தான்... கங்கை அமரன் எனும் படைப்பாளியின் பாட்டுக்காரனின் எளிய முகங்கள்.

இன்று 8ம் தேதி கங்கை அமரன் பிறந்தநாள். பண்ணைபுரத்து கங்கை அமரனை வாழ்த்துவோம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

30 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்