இந்திய அளவில் ட்விட்டரில் சாதனை நிகழ்த்திய படங்கள், பிரபலங்களின் பட்டியல்

By ஐஏஎன்எஸ்

2020-ம் ஆண்டு இந்திய அளவில் ட்விட்டர் தளத்தில் எந்தெந்த படங்கள் சாதனை நிகழ்த்தின என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

2020-ம் ஆண்டு ட்விட்டரில் இந்திய அளவில் அமிதாப் பச்சனுக்குப் பிறகு நடிகர் விஜய் பற்றிய ட்வீட்டுகள்தான் அதிகம் பகிரப்பட்டன என்று ட்விட்டர் தளம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் தென்னிந்திய நடிகர்களில் விஜய் மட்டுமே இதில் இடம் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், அந்த ஆண்டு ட்விட்டரில் அதிகம் ட்ரெண்டில் இருந்த பெயர்கள், தலைப்புகள் பற்றி ட்விட்டர் தளம் அறிக்கை வெளியிடும்.

இந்த வருடம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொழுதுபோக்குப் பிரிவில் அமிதாப் பச்சன், விஜய், சாட்விக் போஸ்மேன் (மறைந்த நடிகர், பிளாக் பேந்தர் திரைப்படத்தின் நாயகன்) ஆகியோர் பற்றிய ட்வீட்டுகள்தான் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

திரைப்படங்களைப் பொறுத்தவரையில் தேசிய அளவில் 'தில் பெச்சாரா' திரைப்படத்தைப் பற்றியே அதிகம் பேசப்பட்டுள்ளது. ஓடிடி மற்றும் தொலைக்காட்சி பொழுதுபோக்கில் 'மிர்ஸாபுர் 2' மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளைப் பற்றி அதிக ட்வீட்டுகள் பகிரப்பட்டுள்ளன. சர்வதேச வெப் சீரிஸில், 'மனீ ஹைஸ்ட்' பற்றிய ட்வீட்டுகள் அதிகம் இருந்துள்ளன.

நடிகர் விஜய் பிப்ரவரி மாதம் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படமே பொழுதுபோக்குப் பிரிவில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட்டாக இருக்கிறது. ஜூலை மாதம் அமிதாப் பச்சன் தனக்குக் கரோனா தொற்று இருப்பதாகப் பகிர்ந்த ட்வீட், இந்த வருடம் அதிகம் விரும்பப்பட்ட, மறுபகிர்வு செய்யப்பட்ட ட்வீட்.

சர்வதேச பொழுதுபோக்குப் பிரிவில், இந்தியாவில், 'ப்ளாக் பேந்தர்' நாயகன் சாட்விக் போஸ்மேன் ஆகஸ்டு மாதம் புற்றுநோய் காரணமாக இறந்து போனார். இவர் காலமானதைப் பற்றிய ட்வீட்டே அதிகம் ரீட்வீட் செய்யப்பட்டு, விரும்பப்பட்டு, மேற்கோள் காட்டிய ட்வீட்டாக இருக்கிறது.

இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட திரைப்படமாக 'தில் பெச்சாரா' இருக்கிறது. இதைத் தொடர்ந்து 'சப்பாக்', 'தன்ஹாஜி', 'தப்பாட்', 'குஞ்ஜன் சக்ஸேனா' ஆகிய படங்கள் இருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE