ராவணன் குறித்த சர்ச்சை கருத்து: மன்னிப்புக் கோரிய சைஃப் அலி கான்

By ஐஏஎன்எஸ்

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள படம் 'ஆதிபுருஷ்'. இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பைத் தொடங்கி, ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்குத் தகுந்தாற் போல் நடிகர்களை ஒப்பந்தம் செய்து வருகிறது. இப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலிகான் நடிக்கவுள்ளார்.

'ஆதிபுருஷ்' திரைப்படம் ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராமராக பிரபாஸ் நடிக்க, ராவணனாக சைஃப் அலி கான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் செய்தி நிறுவனத்துக்கு சைஃப் அலி கான் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் ராவணனின் நல்ல பக்கத்தை காட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். சைஃப் அலி கானின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ராம் கடம் தனது ட்விட்டர் பக்கத்தில் சைஃப் அலி கானை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறும்போது, ‘சைஃப் அலி கானின் கருத்து அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஆதிபுருஷ் படத்தில் ராவணனாக நடிக்கும் அவர் கூறுவதை வைத்து பார்க்கும்போது சீதையை ராவணன் கடத்தியது நியாயப்படுத்தப்படுவது போல தெரிகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தனது கருத்துக்கு சைஃப் அலி கான் மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு பேட்டியில் நான் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும், பலரது உணர்வுகளை புண்படுத்தியதாகவும் அறிகிறேன். நான் எந்த உள்நோக்கத்துடனும் அந்த கருத்தை சொல்லவில்லை. அனைவரிடம் மன்னிப்புக் கோருவதுடன் என்னுடைய கருத்தை திரும்பப் பெறவும் செய்கிறேன்.

ராமர் எனக்கு எப்போதுமே நீதி மற்றும் வீரத்தில் அடையாளமாக இருந்து வருகிறார். தீமையை நன்மை வெற்றி கொள்வதை பற்றிய கதையே ஆதிபுருஷ். அதை எந்தவொரு களங்கமும் இன்றி திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் அனைவரும் இணைந்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகும் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் 'ஆதிபுருஷ்' வெளியாகவுள்ளது. பூஷண் குமார் தயாரிக்கவுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE