சும்மா உட்கார்ந்திருந்தால் மாயாஜாலம் நிகழ்ந்து விடாது - ஏ.ஆர்.ரஹ்மான்

வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களை கவுரவிக்கும் பாஃப்தா அமைப்பு கடந்த வாரம் தனது ‘ப்ரேக்த்ரூ இனிஷியேட்டிவ்' என்ற புதிய முன்னெடுப்புக்குத் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை நியமித்தது.

இதற்கு ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இது குறித்து ஐஏஎன்எஸ் நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் ஏ.ஆர். ரஹ்மான் கூறியிருப்பதாவது:

மனிதர்களை பொறுத்தவரை சிறந்த விஷயங்கள் கூட சில நாட்களில் போர் அடித்துவிடும். வாழ்க்கையின் எந்த ஒரு தருணத்திலும் அந்த சலிப்பு ஒரு மனித குணமாக இருக்கும். புதிய விஷயங்களை செய்வதில் மூலம் தான் அதை போராடி வெல்ல முடியும்.

நம்முடைய வலது கரத்தால் ஒரு விஷயத்தை சிறப்பாக செய்யமுடிந்தால் அதை இடது கையாலும் செய்ய பழகிக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். எனவே நம்முடைய சொகுசுகளிலிருந்து வெளியே வந்து புதிய விஷயங்களை செய்ய வேண்டும்.

இப்போதும் கூட நான் சும்மா உட்கார்ந்திருந்தால் மாயாஜாலம் நிகழ்ந்து விடாது. நான் தொடர்ந்து எனக்கு சவால் விடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் சில நாட்களிலேயே,அந்த மாயாஜாலங்கள் எல்லாம் மறைந்து மூளை செயலற்றுப் போய் விடும். நாம் ஒரு விஷயத்தை செய்து முடித்து விட்டால் அதிலிருந்து விலகிப் போய் விட வேண்டும்.

ஒரே உணவை கூட நம்மால் தொடர்ந்து 5 நாட்களுக்கு உண்ண முடியாது. இது கலை, சினிமா, எழுத்து அனைத்துக்கும் பொருந்தும். எப்போதும் ஒரே போன்ற விஷயங்களை உடைத்து வெளியே வருவதற்கான வழிகளை காண வேண்டும்.

இந்தியாவிலிருந்த் தேர்ந்தெடுக்கப்படும் திறமையாளர்கள் உலகளாவிய மேடைகளை அலங்கரிப்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE