’’நான் பெரிய நடிகையா வருவேன்னு ஜெமினி சார் சொன்னபடியே நடந்துச்சு!’’ - ஜெமினி கணேசன் 100 - கே.ஆர்.விஜயா நெகிழ்ச்சி

By வி. ராம்ஜி

‘’நான் பெரிய நடிகையா வருவேன் என்று ஜெமினி கணேசன் சார் சொன்னார். அடுத்த வருடமே அவர் சொன்னது நடந்தது’’ என்று நடிகை கே.ஆர்.விஜயா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நடிகர் ஜெமினி கணேசனுக்கு இது நூற்றாண்டு. சமீபத்தில் அவரின் நூறாவது பிறந்தநாளையொட்டி, அவரின் மகள் டாக்டர் கமலா செல்வராஜ், அவருடன் நடித்த பிரபலங்களின் கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.

அதில், நடிகை கே.ஆர்.விஜயா தெரிவித்ததாவது:

‘’முதன்முதலில் என்னுடைய டான்ஸ் புரோகிராம் நடந்தது. அதற்கு தலைமை தாங்குவதற்காக நடிகர் ஜெமினி கணேசன் வந்திருந்தார். அப்போதுதான் நான் அவரை முதன்முதலாகப் பார்த்தேன். நிகழ்ச்சிக்கு நடுவில் அவர் பேசினார். ’இந்தப் பொண்ணு நல்லா ஆடுனா. எதிர்காலத்தில் இந்தப் பெண் நல்லா வருவா. பெரிய நடிகையா வருவா’ என்று ஆசீர்வாதம் செய்து வாழ்த்தினார்.

அப்படி அவர் சொல்லி, ஒருவருடம் இருக்கும் என்று நினைக்கிறேன். அதன் பிறகு, அவருடனேயே சேர்ந்து நடிக்கக் கூடிய வாய்பு கிடைத்தது. அந்தப் படம்தான் ‘கற்பகம்’ திரைப்படம்.

என்னால் மறக்கவே முடியாது. அவருடைய வாழ்த்துகள், நிஜமாகவே உண்மையாகிவிட்டது. பலித்துவிட்டது. அதிலும் ‘கற்பகம்’ படத்தில் சாவித்திரியம்மா ஒருபக்கம், ரங்காராவ் சார் ஒருபக்கம் என்று பெரிய பெரிய கலைஞர்களெல்லாம் நடித்ததற்கு நடுவில், நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

சொல்லப்போனால், அந்தப் படத்தில் நடித்தவர்களில் நான் தான் சின்னப்பெண். ஆனால் ‘கற்பகம்’ எனும் டைட்டில் ரோல் கிடைத்தது.

இப்பவும் நினைவிருக்கிறது. ‘ஆயிரம் இரவுகள் வருவதுண்டு’ பாடல். அந்தப் பாடலில் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் கொஞ்சம் மேலே அழுத்தி தலை சீவியிருந்தேன். அப்போது, ஜெமினி சாரும் சாவித்திரியம்மாவும் என்னிடம் வந்தார்கள். ‘இப்படி அழுத்திச் சீவாம, கொஞ்சம் காது மறைக்கிற மாதிரி சீவினா, ரொம்ப நல்லாருக்கும்’ என்று அறிவுரை சொன்னார்கள். இதோ... இப்போது வரைக்கும் அப்படித்தான் தலைவாரிக்கொண்டிருக்கிறேன்.

’கற்பகம்’ படத்துக்குப் பிறகு ஜெமினி சாருடன் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். ‘சின்னஞ்சிறு உலகம்’ படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தேன். அந்தக் கேரக்டர் என்னால் மறக்கவே முடியாது. ரொம்பவே துறுதுறுவெனப் பேசுகிற கேரக்டர். பாசமான அண்ணனான அவர் நடித்திருந்தார்.

அதன் பின்னர், ’சரஸ்வதி சபதம்’ திரைப்படம். இதில் எங்களுக்கு வித்தியாசமான கேரக்டர். போட்டி போட்டுக்கொண்டு நடித்தோம். காலையில் ஏழு மணிக்கெல்லாம் வந்துவிடுவோம். ‘நீ அப்படிப் பேசு, நான் அப்படிப் பேசுறேன்’என்று எல்லோரும் ரிகர்சல் பார்த்துவிட்டு, போட்டி போட்டுக்கொண்டு நடித்தோம். இந்தப் படம் என் வாழ்க்கையில் கிடைத்த மிக முக்கியமான படிக்கட்டு என்றுதான் சொல்லவேண்டும்.

இதன் பின்னர், ஜெமினி சாருடன் நான் ‘குறத்தி மகன்’ படத்தில் நடித்தேன். இதையும் என்னால் மறக்கவே முடியாது. அந்தக் கேரக்டர்களை இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அழகாகச் சொல்லிக் கொடுத்தார்.

எல்லாப் படங்களிலும் ஜெமினி கணேசன் சாரை, ரொம்ப சாஃப்ட்டாகத்தான் பார்த்திருப்போம். இதில் முரட்டுத்தனமான கேரக்டர். வித்தியாசமாக நடித்திருந்தார். ‘நீ இப்படி நடி, இப்படி அடி’ என்றெல்லாம் உற்சாகமாக சொல்லிக் கொடுத்தார். நான் கொஞ்சம் டல்லாக இருந்தாலும் என்னை உற்சாகப் படுத்தினார். ‘நல்லாப் பண்ணு. உனக்கு நல்லபேர் கிடைக்கும்’ என்று ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். தைரியம் கொடுத்தார். அந்தப் படத்துக்கு என்றில்லாமல், எல்லாப் படங்களுக்கும் அப்படித்தான் பண்ணுவார்.


எப்போதுமே, எல்லோரிடமுமே கலகலப்பாக இருப்பார். சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டே இருப்பார். ஜெமினி கணேசன் சாரை எப்போதுமே அப்படித்தான் பார்த்திருக்கிறேன். அவருடன் நடித்த நாட்களெல்லாம் என்னால் மறக்கவே முடியாது.’’

இவ்வாறு கே.ஆர்.விஜயா தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE