வலிமையான பெண்களின் கதைகளால் ஊக்கம் பெறுகிறேன்: வித்யா பாலன்

By ஐஏஎன்எஸ்

என்னுடைய வாழ்க்கையில் எப்போதும் வலிமையான பெண்கள் மூலமாகவே ஊக்கம் பெற்று வந்துள்ளேன் என்று நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.

2005-ஆம் ஆண்டு வெளியான ‘பரினீதா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் வித்யா பாலன். ‘பா’, ‘கஹானி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.

இப்படத்துக்குப் பிறகு நாயகியை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘சகுந்தலா தேவி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது வித்யா பாலன் ‘நட்கத்’ என்னும் குறும்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஏராளமான விருதுகளை வென்று பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

இப்படம் குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு வித்யா பாலன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

வலிமையான பெண்களைத் திரையில் காட்ட வேண்டியது எனது பொறுப்பு என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அதுதான் நான் செல்லும் வழி. ஏனெனில் வலிமையான பெண்களின் கதைகளால் தான் நான் ஊக்கம் பெறுகிறேன். என்னுடைய வாழ்க்கையில் எப்போதும் வலிமையான பெண்கள் மூலமாகவே ஊக்கம் பெற்று வந்துள்ளேன்.

‘நட்கத்’ படத்தின் கதை என்னிடம் சொல்லப்பட்ட போது அது மிகவும் சக்தி வாய்ந்ததாகத் தோன்றியது. மக்களின் வாழ்க்கையைப் பற்றி பேசும் படமாகவும், அவர்கள் தங்களை இப்படத்தோடு தொடர்புப் படுத்திக் கொள்ளக் கூடும் என்றும் நான் உணர்ந்தேன்.

ஒரு நடிகருக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்கு இப்படத்துக்கு பட்ஜெட் குறைவானது என்பதால் இப்படத்தில் என்னையும் ஒரு தயாரிப்பாளராக இணையும்படி ரோனி ஸ்க்ரூவாலா என்னிடம் கோரிக்கை விடுத்தார்.

இவ்வாறு வித்யா பாலன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE