யாஹூவில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியல்: சுஷாந்த் முதலிடம்; மோடிக்கு 2-வது இடம்

By ஐஏஎன்எஸ்

2020ஆம் ஆண்டில் யாஹூ தளத்தில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் சுஷாந்த் சிங்கின் பெயர் முதலிடம் பெற்றுள்ளது.

கடந்த ஜூன் மாதம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கடுமையான மன அழுத்தத்தின் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டாலும், பாலிவுட்டில் இருக்கும் வாரிசு அரசியல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது.

நடிகை கங்கணா உள்ளிட்டோர் இந்தப் பிரச்சினையை மேலும் பெரிதாக்க, சமூக வலைதளங்கள் முழுவதும் இன்று வரை விவாதிக்கப்பட்டு வருகிறது. இப்போது வரை இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் சுஷாந்த் விவகாரம் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டில் யாஹூ தளத்தில் அதிகம் தேடப்பட்ட பெயராக சுஷாந்த் சிங்கின் பெயர் இடம்பெற்றுள்ளது. அவரது காதலி ரியா சக்ரவர்த்தியின் பெயர் அதிகம் தேடப்பட்ட பெண் பிரபலங்களின் பெயர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் கடந்த மூன்று ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மூன்றாம் இடத்தில் ரியாவும், அவரைத் தொடர்ந்து ராகுல் காந்தி, அமித் ஷா, உத்தவ் தாக்கரே, அரவிந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி, அமிதாப் பச்சன், கங்கணா ரணாவத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதிகம் தேடப்பட்ட ஆண் பிரபலங்களின் பட்டியலிலும் அமிதாப், அக்‌ஷய் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி சுஷாந்த் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அதிகம் தேடப்பட்ட பெண் பிரபலங்களின் பட்டியலில் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரோ ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி ரியா சக்ரவர்த்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை கங்கணா பிடித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE