பிஹாரிலிருந்து மும்பைக்கு சைக்கிளில் விரைந்த ரசிகர்: விமானம் வைத்து அழைத்து வந்த சோனு சூட்

By செய்திப்பிரிவு

பிஹாரிலிருந்து மும்பைக்கு சைக்கிளில் பயணப்பட்டு தன்னை சந்திக்க விரைந்த ரசிகரை விமானம் வைத்து அழைத்து வந்துள்ளார் நடிகர் சோனு சூட்.

ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார். வறுமையில் வாடிய விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி எனத் தொடர்ந்து பல்வேறு உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வந்தார்.

பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார். சண்டிகர் அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய வகுப்புகளைக் கவனிக்க, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை அளித்து உதவி செய்தார். மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவரே அமைத்துக் கொடுத்தார்.

சோனு சூட் உதவியால் பயனடைந்தவர்கள் பலர் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் தங்கள் கடைகளுக்கு அவர் பெயரை வைப்பது, கடவுளுக்கு நிகராக வணங்குவது என அன்பு காட்டி வருகின்றனர். அப்படி சோனுவின் நல உதவிகளைப் பற்றித் தெரிந்து அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஒரு ரசிகர் பிஹாரிலிருந்து மும்பைக்கு சைக்கிளிலேயே பயணம் மேற்கொண்டுள்ளார்.

அர்மான் என்கிற இந்த இளைஞரின் செயலை அறிந்து கொண்ட சோனு சூட் அவரை தொடர்பு கொண்டு, வாரணாசியில் தடுத்து நிறுத்தி அங்கிருந்து மும்பைக்கு விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடுகள் செய்துள்ளார்.

"நான் அவருக்கு அவ்வளவு விசேஷமானவன் என்றால் அவரது பயணத்தை நான் விசேஷமானதாக்க வேண்டும். அவரது பயணச் செலவு, மும்பையில் ஹோட்டலில் தங்கும் செலவு என அனைத்தும் என்னுடையதே" என்று சோனு சூட் கூறியுள்ளார். அர்மானோடு சேர்த்து அவரது சைக்கிளும் விமானத்தில் மும்பைக்கு பயணப்பட்டு மீண்டும் வீடு திரும்பவுள்ளது.

பிஹாரைச் சேர்ந்த, வெளி மாநிலங்களிலிருக்கும் பல தொழிலாளர்கள் மீண்டும் வீடு திரும்ப சோனு சூட் உதவி செய்துள்ளார். பிஹார் அரசியல்வாதிகளே செய்யாத உதவி இது. ஒருவருக்கு உதவி செய்வதை விட, அவர் துன்பத்திலிருந்து விடுபட்டார் என்று உறுதியாகும் வரை அவருக்கு ஆதரவு தருவது பெரிய விஷயம். அதைத்தான் சோனு சூட் செய்து வருகிறார். அதனால் தான் அவரை சந்திக்க விரைந்ததாக அர்மான் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE