‘இந்திய சினிமா என்பது வெறும் நான்கு குடும்பங்கள் அல்ல’ - ‘ஜல்லிக்கட்டு’ படக்குழுவினருக்கு கங்கணா வாழ்த்து 

By செய்திப்பிரிவு

இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டுள்ள ‘ஜல்லிக்கட்டு’ படக்குழுவினருக்கு நடிகை கங்கணா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த மலையாளத் திரைப்படம் 'ஜல்லிக்கட்டு'. ஹரீஷ்.எஸ் எழுதியிருந்த ‘மாவோயிஸ்ட்’ என்கிற சிறுகதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருந்த திரைப்படம் இது. 2019ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சகர்களிடமும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது, சிறந்த அயல்நாட்டு / சர்வதேசத் திரைப்படம் என்கிற பிரிவில் இந்தியாவின் சார்பாகப் போட்டியிட 'ஜல்லிக்கட்டு' தேர்வாகியுள்ளது. இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு இந்தப் படத்தைத் தேர்வு செய்துள்ளது.

‘ஜல்லிக்கட்டு படக்குழுவினருக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நடிகை கங்கணா ரணாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''எல்லா பாலிவுட் கும்பல்களும் கடைசியில் சில முடிவுகளை அறுவடை செய்துள்ளன. இந்திய சினிமா என்பது வெறும் நான்கு குடும்பங்கள் மட்டுமல்ல. திரைப்பட மாஃபியா கும்பல்கள் தங்கள் வீடுகளில் முடங்கிக் கிடப்பதால் தேர்வுக் குழு தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்துள்ளது. ‘ஜல்லிக்கட்டு’ குழுவினருக்கு வாழ்த்துகள்''.

இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.

ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட 'தி டிஸைபில்', 'ஷகுந்தலா தேவி', 'ஷிகாரா', 'குஞ்ஜன் சக்ஸேனா', 'சப்பாக்', 'குலாபோ சிதாபோ', 'செக் போஸ்ட்', 'சிண்டூ கா பர்த்டே' உள்ளிட்ட 27 படங்கள் இந்தியா சார்பில் போட்டியிட்டன. இதிலிருந்து 'ஜல்லிக்கட்டு' தேர்வாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE