முதல் பார்வை: காவல்துறை உங்கள் நண்பன்

By செய்திப்பிரிவு

அதிகார வர்க்கமும், நமது நிர்வாக அமைப்பும் எப்படி சாதாரண மக்களை மிக எளிதாகப் பந்தாட முடியும் என்பதை இயல்பாகப் பதிவு செய்திருக்கும் படம் 'காவல்துறை உங்கள் நண்பன்'.

குடும்பத்தை விட்டுப் பிரிந்து காதல் திருமணம் செய்து கொண்டிருக்கும் இளம் ஜோடி சுரேஷ் ரவி மற்றும் ரவீனா. சென்னை புறநகரில் தனியாக வசித்து வருகின்றனர். ஒரு நாள் ரவீனாவுக்கு சில சமூக விரோதிகளால் மோசமான அனுபவம் ஏற்பட, அவர்களைத் தேடி மனைவியுடன் பைக்கில் கிளம்புகிறார் சுரேஷ் ரவி. வழியில் ஒரு காவல்துறை அதிகாரி சோதனைக்கு வழிமறிக்க, அப்போது சுரேஷ் ரவி சொல்லும் ஒரே ஒரு வார்த்தையினால் அவரது வாழ்க்கையே மொத்தமாக மாறிப் போகிறது.

சுரேஷ் ரவி, தார்மீகமான கேள்விகள், கோபம் எழும்போதும், சரி ஒதுங்கிப் போவோம் என முடிவெடுத்து மன்னிப்புக் கேட்கும்போதும் மிக யதார்த்தமாகத் தெரிகிறார். காதல் காட்சிகளில் மட்டும் இன்னும் பயிற்சி தேவை.

ரவீனா ஏற்கனவே தனது குரல் நடிப்பில் நிரூபித்தவர். திரை நடிப்பில் நிரூபிக்கும் அளவுக்கான காட்சிகள் இதில் இல்லை என்றாலும் பாவப்பட்ட ஒரு இளம் பெண்ணைக் கண்முன் நிறுத்துகிறார்.

நடிப்பிலும், கதையிலும் ராட்சசனாக இருப்பவர் மைம் கோபியே. அவர் பல முறை நடித்த வில்லன் கதாபாத்திரம் என்றாலும் இந்த மொத்தப் படமும் அவரது வில்லத்தனத்தைச் சார்ந்தே இருக்கிறது என்பதால், நடிப்பில் அதன் வீரியத்தை அதிகரித்து கதாபாத்திரம் மீதான ரசிகர்களின் கோபத்தைக் கச்சிதமாகச் சம்பாதித்துக் கொள்கிறார். அவருடனே வரும் ஆர்ஜே முன்னா உதட்டோரம் நக்கலான சிரிப்பிலேயே வில்லத்தனத்தைக் காட்டி கவனிக்க வைக்கிறார்.

ஆதித்யா மற்றும் சூர்யாவின் இசையில் காதல் பாடல் இனிமை. பின்னணி இசை கதையை அழுத்தமாகக் கூற உதவியிருக்கிறது. காவல் நிலையத்தைக் காட்டும்போது வெப்பமான வண்ணங்கள், காதல் ஜோடிகளைக் காட்டும்போது குளிர்ச்சியான வண்ணங்கள் என விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவு படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறது.

யதார்த்தமான ஒரு பிரச்சினை, நமக்கும் கூட இப்படி நடந்திருக்கிறதே அல்லது நடந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறதே என அனைவராலும் புரிந்துகொள்ள முடிகிற, தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிற கதையும், அது அக்கறையுடன் சொல்லப்பட்ட விதமும்தான் படத்தின் முக்கியமான சிறப்பம்சம். ஒவ்வொரு படியாக சுரேஷ் ரவி காவல்துறையிடம் பிரச்சினையில் சிக்குவது, மீண்டுவிட்டோம் என்று நினைக்கும்போது வேறு ஏதோ வழியில் அவரை வேண்டுமென்றே அதிகார வர்க்கம் சீண்டுவது எனத் தொடர்ந்து ரசிகர்களைப் பதைபதைப்போடு வைத்திருக்கிறார் இயக்குநர் ஆர்டிஎம்.

ஒவ்வொரு முறையும் சுரேஷ் ரவி காவல் நிலையத்துக்குள் அடியெடுத்து வைக்கும்போது நம் அடிவயிறு கலங்குகிறது, அந்த அளவுக்குக் கதாபாத்திரத்தின் அச்ச உணர்வை நம்மையும் உணர வைக்கிறார். உச்சகட்டக் காட்சியில் சுரேஷ் ரவியின் செயல், அதன் விளைவுகள் இரண்டுமே நம்பும்படி சொல்லப்பட்டிருப்பது படத்துக்குக் கூடுதல் வலு.

'விசாரணை' என்கிற திரைப்படம் மூலம் இயக்குநர் வெற்றிமாறன் நுணுக்கமாகக் கையாண்ட விஷயத்தைப் பொட்டில் அடித்தாற் போல முகத்துக்கு நேரே சொல்லியிருப்பதுதான் 'காவல்துறை உங்கள் நண்பன்' படத்தின் சாதகம், பாதகம் இரண்டுமே.

முதல் காட்சியிலேயே இதுதான் முடிவு என்று சொல்லிவிட்டு ஆரம்பிப்பது, கதையின் வசதிக்காக ஒரு காவல்துறை அதிகாரி கூட நேர்மையானவர் என்று காட்டாமல் போனது, பிரதான கதாபாத்திரம் மீது ஊடக வெளிச்சம் விழுந்த பின்னும் அவர் அதைவைத்து புத்திசாலித்தனமாக எதுவும் யோசிக்காமல் இருப்பது என ஒரு சில விஷயங்களில் சறுக்கியிருக்கிறார் இயக்குநர்.

'விசாரணை'யோடு ஒப்பீட்டளவில் பார்த்தால் பரவாயில்லை ரகம் என்று சொல்லவைக்கும் படம் இந்தக் 'காவல்துறை உங்கள் நண்பன்'. விசாரணை பார்க்காதவர்களுக்கு அழுத்தமான, வயிற்றைப் பிசையும், படம் முடிந்தும் பாதிப்பைத் தரும் ஒரு படைப்பாக இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்