புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி காலமானார்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற நடிகர் தவசி சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். அவருக்கு வயது 60.

மதுரையைச் சேர்ந்த குணச்சித்திர நடிகர் மீசை தவசி. இவர், கிழக்குச் சீமையிலே படம் முதல் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படம் வரை பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வந்தார். சிவகார்த்திகேயன், சூரி நடிப்பில் பொன்ராம் இயக்கிய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற படத்தில் கம்பீரமாகப் பேசிய நடிகர் தவசி, பல படங்களில் கிராமத்து கோயில்களின் பூசாரி ஆகவும் நடித்து பட்டி தொட்டி முழுவதும் பிரபலமானார்.

சமீபத்தில் இவர், உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை நரிமேடு சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார். இதனால் அவரது இயல்பான கம்பீரத்தையும், மீசையையும் இழந்து உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் காணப்பட்டார்.

மருத்துவ சிகிச்சைக்குப் பணமில்லாமல் தடுமாறினார். அவர் சிகிச்சைப் பெற்ற மருத்துவமனை உரிமையாளரும், திமுக எம்எல்ஏவுமான டாக்டர் சரணவன், அவரது அறக்கட்டளை மூலம் உதவி செய்து வந்தார்.

ஆனால், அது மருத்துவமனை சிகிச்சைக்கான உதவி மட்டும் என்பதால் மற்ற பொருளாதார உதவியில்லாமல் தவித்தார்.

இதையடுத்து பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும் தனக்கு உதவும்படியும் அவர் வீடியோ மூலம் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

இதுகுறித்து தமிழ் இந்துவில் செய்தி வெளியானது. தகவல் அறிந்த சினிமா நடிகர்கள், நாடக நடிகர்கள், அவருக்குப் பொருளாதார உதவிகள் செய்தனர். அதனால், அவருக்கு சிகிச்சை எந்தத் தடையும் இல்லாமல் சென்ற நிலையில் இன்று மாலை திடீரென்று சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

அவரது உடல் மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறை கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE