விபிஎஃப் கட்டணத்தில் முழு விலக்கு: தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி உறுதி

By செய்திப்பிரிவு

விபிஎஃப் கட்டணத்தில் கண்டிப்பாக முழு விலக்கு கோருவோம் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவராக வெற்றி பெற்றுள்ள தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தெரிவித்துள்ளார்.

2020-22ஆம் ஆண்டிற்கான தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றுள்ளார். அவருடைய அணியினர் பெருவாரியாக வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்துள்ளனர். தற்போது தமிழக அரசு நியமித்துள்ள அதிகாரியின் கீழ் தயாரிப்பாளர் சங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் பொறுப்புகள் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணியினரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், தலைவராக வெற்றி பெற்றவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி பேசியதாவது:

"ஓட்டுப் போட்ட அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1,050 வாக்குகளைப் பதிவு செய்து மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கி இருக்கிறார்கள். சங்கத்தில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்று நம்பி வாக்களித்துள்ளனர். இதில் எனக்கு 557 வாக்குகள் அளித்து என்னை வெற்றிபெற வைத்துள்ளனர்.

முதல் வேலையாகத் தேங்கிக் கிடக்கும் படங்களை வெளியிடும் முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம். நிதி நிலைமையைப் பார்த்து நலத்திட்ட உதவிகளைத் தொடங்க வேண்டும். நிறைய தயாரிப்பாளர்கள் அதை எதிர்நோக்கியுள்ளனர். குறுகிய கால மற்றும் நெடுங்காலத் திட்டங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

வி.பி.எஃப் கட்டணத்தைப் பொறுத்தவரையில் முழுமையாக விலக்கு கேட்கவுள்ளோம். நாங்கள் தேர்தல் அறிக்கையில் அதைத்தான் சொல்லியிருக்கிறோம். அதன் பேச்சுவார்த்தையை உடனே தொடங்கவுள்ளோம். ஏனென்றால் நிறைய படங்கள் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன. நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் முடிவுகளை அறிவிப்போம்".

இவ்வாறு முரளி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE