நடிகை பார்வதியின் ராஜினாமாவை ஏற்ற மலையாளத் திரைப்பட நடிகர் சங்கம்

மலையாளத் திரைப்பட நடிகர் சங்கமான அம்மாவின் பொதுச் செயலாளர் எடவேல பாபுவின் சர்ச்சையான கருத்துகளைக் கண்டித்து நடிகை பார்வதி திருவோத்து ராஜினாமா செய்ததை அச்சங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

2017-ம் ஆண்டு, நடிகை ஒருவர் ஓடும் காரில் கடத்தப்பட்டு, வன்கொடுமைக்கு ஆளானார். நடிகர் திலீப் இந்த வழக்கில் ஒரு குற்றவாளி. இந்நிலையில், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் சங்கத்தின் பொதுச் செயலாளர் எடவேல பாபுவிடம், திரையுலக ஊழியர்களின் நலனுக்காக எடுக்கப்படும் திரைப்படத்தில் அந்த நடிகை இடம்பெறுவாரா என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த பாபு, அந்த நடிகை சங்கத்தில் உறுப்பினராக இல்லை என்றும், இறந்தவர்களைத் தங்களால் உயிர்ப்பிக்க முடியாது என்றும் பதில் கூறினார்.

இந்தக் கருத்துகளைக் கண்டித்து சங்கத்திலிருந்து ராஜினாமா செய்வதாக நடிகை பார்வதி ஏற்கெனவே அறிவித்திருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இதில் பார்வதியின் ராஜினாமாவை சங்கம் ஏற்றுக்கொண்டது. மேலும், எடவேல பாபுவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்றும் சங்கம் அறிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினரான பினீஷ் போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யபட்டு விசாரிக்கப்பட்டிருந்தார். இதனால் பினீஷை சங்கத்தை விட்டு நீக்க வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்தன. இந்த விஷயத்திலும் பினீஷ் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரிடம் இந்தப் பிரச்சினை குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது.

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக எடவேல பாபுவின் கருத்துகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நடிகைகள் ரேவதி மற்றும் பத்மப்ரியா ஆகியோர் கடிதம் எழுதியிருந்தனர். இதற்கும் எந்த பதிலும் சங்கத்தின் தரப்பிலிருந்து அளிக்கப்படவில்லை என்றே தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE