தன் பெயரைப் பயன்படுத்தி போலி தொலைபேசி அழைப்புகள் - ‘பிரேமம்’ இயக்குநர் போலீஸில் புகார்

By செய்திப்பிரிவு

2015-ம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'பிரேமம்'. நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்த அனைவருமே இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள்.

'பிரேமம்' வெற்றிக்குப் பிறகு 5 ஆண்டுகளாக எந்த ஒரு பட அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வந்த அல்போன்ஸ் புத்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்தார். ‘பாட்டு’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஃபகத் பாசில் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் யாரோ ஒரு நபர் தனது பெயரை பயன்படுத்தி நடிகைகள் சிலருக்கு போன் செய்து பேசியதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அல்போன்ஸ் புத்திரன் தனது பதிவில் கூறியுள்ளதாவது:

9746066514’, ‘9766876651’ ஆகிய எண்களைக் கொண்ட ஒரு நபரைப் பற்றி உங்களது கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். இந்த நபர் என்னுடைய பெயரை பயன்படுத்தி பல்வேறு நடிகைகளுக்கு, வேறு சில பெண்களுக்கும் போன் செய்து பேசியுள்ளார்.

நான் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது என்னிடமே அவர் ‘நான் அல்போன்ஸ் புத்திரன் பேசுகிறேன்’ என்று கூறினார். என் பெயரை பயன்படுத்தி போன் செய்து பேசி வரும் இவர் மீது காவல்துறையில் புகாரளித்துள்ளேன். மேற்குறிப்பிட்ட எண்களில் இருந்து இதே போன்ற அழைப்புகள் வந்தால் கவனமாக இருக்கவும்.

இது போன்ற அழைப்புகள் ஏதேனும் வந்தால், புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள எதையும் பகிர வேண்டாம்.

இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE