முடிவுக்கு வந்த வனத்துறை சிக்கல்: 'ஈஸ்வரன்' குழுவினர் நிம்மதி

By செய்திப்பிரிவு

வனத்துறை தொடர்பான சிக்கல் முடிவுக்கு வந்திருப்பதால், 'ஈஸ்வரன்' குழுவினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'ஈஸ்வரன்'. இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, பொங்கல் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. தீபாவளி அன்று வெளியிடப்பட்ட டீஸருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனிடையே, 'ஈஸ்வரன்' படப்பிடிப்புத் தளத்தில் சிம்பு பாம்பு பிடிப்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. இது வைரலாக பரவியது. அப்போது சமூக ஆர்வலர் ஒருவர் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இதனால் 'ஈஸ்வரன்' படத்துக்குச் சிக்கல் உண்டானது.

இந்த விவகாரம் தொடர்பாக வனத்துறை அதிகாரி எடிசனிடம், 'ஈஸ்வரன்' படக்குழுவினர் நேரில் விளக்கமளித்தனர். இந்த விளக்கத்தை தற்போது வனத்துறை ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரி எடிசனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:

"இயக்குநர் சுசீந்திரன், கலை இயக்குநர் உள்ளிட்டோர் காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டது என்ற விளக்கத்தை நேரில் அளித்தார்கள். அப்போது ரப்பர் பாம்பை கொண்டு வந்து காட்டினார்கள். அது நிஜ பாம்பு மாதிரியே இருந்தது. ஆகையால் அவர்களுடைய விளக்கத்தை ஏற்றுக் கொண்டோம்"

இவ்வாறு வனத்துறை அதிகாரி எடிசன் தெரிவித்தார்.

இதன் மூலம் 'ஈஸ்வரன்' படக்குழுவினருக்கு வனத்துறை சார்பில் ஏற்பட்ட சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், விலங்குகள் நல வாரியத்தால் ஏற்பட்டுள்ள சிக்கல் இன்னும் முடிவு வரவில்லை. வனத்துறை அனுமதி கொடுத்துவிட்டதால், விலங்குகள் நல வாரியம் சிக்கலும் தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE