ரஜினிக்கு காய்ச்சல் என்ற தகவலில் உண்மை இல்லை; மக்கள் தொடர்பாளர் ரியாஸ் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த்துக்கு காய்ச்சல் என்பது, யாரோ விஷமிகள் கிளப்பிவிட்ட வதந்தி என, அவருடைய மக்கள் தொடர்பாளர் ரியாஸ் தெரிவித்துள்ளார்.

கரோனா ஊரடங்குக்கு முன்னதாக, சிவா இயக்கத்தில், 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். இதையடுத்து, கரோனா ஊரடங்கு அமலானதால், படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கினாலும், 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே, ரஜினிகாந்த்தின் வயது முதிர்வு மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை ஆகியவற்றை காரணம் காட்டி, தற்போது அரசியல் பிரவேசம் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக, சமூக வலைதளங்களில் ரஜினி பெயரில் ஒரு கடிதம் உலவியது.

இதுகுறித்து விளக்கம் அளித்திருந்த ரஜினிகாந்த், அந்த கடிதம் தான் வெளியிட்டது அல்ல எனவும், எனினும் மருத்துவர்கள் தனக்கு அளித்த அறிவுரைகள் உண்மை எனவும், தெரிவித்திருந்தார். மேலும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் எனவும் ரஜினி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரஜினிக்கு காய்ச்சல் எனவும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் உலா வந்தன. இதுகுறித்து, இன்று (நவ. 22) தனியார் தொலைக்காட்சிக்கு விளக்கமளித்திருக்கும் ரஜினியின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ், இது யாரோ விஷமிகள் கிளப்பிவிட்ட வதந்தி என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE