ஈஸ்வரன் கொடுப்பான் என் மகனுக்கு நல்ல வரன்: டி.ராஜேந்தர்

By செய்திப்பிரிவு

சிம்புவுக்கு திருமணம் எப்போது என்ற கேள்விக்கு, டி.ராஜேந்தர் பதிலளித்துள்ளார்.

'ஈஸ்வரன்' படத்தை முடித்துவிட்டு, தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. தற்போது முழுமையாக உடம்பைக் குறைத்து, மீண்டும் பழைய சிம்புவாக திரும்பியிருக்கிறார். இது அவருடைய குடும்பத்தினரையும், ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதே வேளையில், சிம்புவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தொடர்ச்சியாக சிம்புவுக்கு திருமணம் எப்போது என்ற கேள்வியை, டி.ராஜேந்தர் பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பி வந்தனர். இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் டி.ராஜேந்தர்.

இதற்காக நேற்று (நவம்பர் 21) பத்திரிகையாளர்களைத் தனது அணியினருடன் சந்தித்தார் டி.ராஜேந்தர். அந்தச் சந்திப்பில் சிம்புவின் திருமணம் குறித்த கேள்விக்கு டி.ராஜேந்தர் கூறியதாவது:

"என் பையன் சென்றார். ஒரே மாதத்தில் சுசீந்திரன் படத்தை முடித்துவிட்டு வந்தார். அது ஈஸ்வரன். அந்தப் பெயரில் இருக்கிறது வரன். ஒரு பையனுடைய கல்யாணத்துக்கு தேடணும் வரன். நான் தேடிப் பார்த்தேன் பல வரன். ஆனால், இன்றைக்கு அந்த வரனைக் கொடுக்கக் கூடியது அந்த ஈஸ்வரன். அந்த ஈஸ்வரன், பரமேஸ்வரன், சனீஸ்வரன் அதை நம்புகிறேன்.

அவன் ஈஸ்வரன். அவன் கொடுப்பான் என் மகனுக்கு நல்ல வரன். அவன் கொடுப்பான் நல்ல பலன். அவன் கொடுப்பான் நல்ல நலன். நிச்சயமாக அதை நம்புறேன். இன்று 'மாநாடு' ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அவர் அப்பா மாதிரி எம்மதமும் சம்மதம் என்று இருக்கிறார். ஏக இறைவனை வணங்கக் கூடிய கொள்கையை ஏற்றுக் கொண்டவர். அவ்வளவு தான்.

2021-ம் ஆண்டு பிறந்தால் நல்லது நடக்கும் என நம்புகிறேன். இறைவன் அருளால், பத்திரிகையாளர்களின் ஆதரவால் என் பையனுக்கு நல்ல வரன் அமைந்து கல்யாண் நடக்கும் என நம்புகிறேன்"

இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE