ஓடிடி தளங்களுக்கு எதிர்காலம் இருக்கும் என்பதில் நம்பிக்கையில்லை: நவாசுதின் சித்திக்

இந்தியாவில் ஓடிடி தளங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும், கூட்டத்தோடு கூட்டமாக ஒப்பேற்றும் கூட்ட மனப்பான்மை ஆரம்பித்துவிட்டது என்றும் நடிகர் நவாசுதின் சித்திக் கூறியுள்ளார்.

"உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் வழக்கமான பாலிவுட் படங்களிலிருந்து வித்தியாசமான படைப்புகள் தான் ஓடிடியில் வந்து கொண்டிருந்தன. ஒரு தனித்துவம் இருந்தது. ஆனால் இப்போது எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. ஒரு கூட்ட மனப்பான்மையை நோக்கிச் செல்கிறோம். அப்படியென்றால் கண்டிப்பாக ஒரு வீழ்ச்சி இருக்கும். நினைத்த அளவை விட குறையும் சாத்தியமும் உள்ளது.

இங்கு கலை என்பது வியாபாரமாக்கப்பட்டுவிட்டது. இந்த போக்கு ஓடிடி தளங்களிலும் நுழையும். வியாபாரம் என்கிற பெயரையில் என்னவெல்லாமோ காட்டுவது நடக்கிறது என அஞ்சுகிறேன். இந்த போக்கு தொடங்கிவிட்டது. உதாரணத்துக்கு, சில குறிப்பிட்ட வகையான படங்கள் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகாது என்று நினைத்தேன். ஆனால் வெளியாகிறது. ஓடிடி தளங்களுக்கென வித்தியாசமான ரசிகர்கள் உள்ளனர். முதலில் இந்த ஓடிடி அலையில் நம்பிக்கையுடன் இருந்தேன்.

கண்டிப்பாக இந்த அலையால் நல்ல மாற்றம் வரும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது எனக்கு நம்பிக்கையில்லை. தரம் குறைந்து கொண்டே வருகிறது" என்று நவாசுதின் கூறியுள்ளார்.

இந்த வருடம் ’சீரியஸ் மென்’, ’ராத் அகேலி ஹை’, ’கூம்கேது’ என நவாசுதினின் மூன்று திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE