‘பாலிவுட் வைவ்ஸ்’ தலைப்பு விவகாரம்: கரண் ஜோஹரை சாடும் இயக்குநர் மதூர் பந்தர்கர்

By ஐஏஎன்எஸ்

பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தனது அனுமதியின்றி தனது பட தலைப்பை பயன்படுத்திக் கொண்டதாக இயக்குநர் மதூர் பந்தர்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கரண் ஜோஹரின் தர்மாட்டிக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சி ‘ஃபேபுலஸ் லைவ்ஸ் ஆஃப் பாலிவுட் வைவ்ஸ்’. இந்த நிகழ்ச்சி வரும் நவம்பர் 27 முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதில் பாலிவுட் பிரபலங்களின் மனைவிகளான மஹீப் கபூர், நீலம் கோத்தாரி, சீமா கான், பாவனா பாண்டே உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் ட்ரெய்லர் கடந்த வாரம் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் ‘பாலிவுட் வைவ்ஸ்’ என்ற தலைப்பை ஒரு படத்துக்காக 2016-ம் ஆண்டு முதல் தான் முடிவு செய்து வைத்திருப்பதாகவும், தன் அனுமதியின்றி இந்தத் தலைப்பை கரண் ஜோஹர் அபகரித்துக் கொண்டதாகவும் இயக்குநர் மதூர் பந்தர்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அன்புள்ள கரண் ஜோஹர், நீங்களும் அபூர்வா மேத்தாவும் என்னிடம் உங்களின் இணைய நிகழ்ச்சிக்காக ‘பாலிவுட் வைவ்ஸ்’ என்ற தலைப்பை தருமாறுக் கேட்டீர்கள். ஆனால் எனது படத்துக்கான வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் அந்த தலைப்பைத் தர நான் மறுத்தேன். ஆனால் அந்தத் தலைப்பு ‘ஃபேபுலஸ் லைவ்ஸ் ஆஃப் பாலிவுட் வைவ்ஸ்’ என்று அபகரித்து மாற்றுவது மிகவும் தவறு. தயவு செய்து என்னுடைய படத்தை சிதைக்காதீர்கள். படத்தலைப்பை மாற்றுமாறு உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மாதுர் கூறியுள்ளார்.

‘பாலிவுட் வைவ்ஸ்’ என்ற படத்தைப் பற்றி தான் 2016-ம் ஆண்டு ட்விட்டரில் வெளியிட்ட ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார் மதூர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE