பட்டாசு வெடிப்பதை விமர்சித்த விவகாரம்: கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ரூபாவைச் சாடிய கங்கணா

By ஐஏஎன்எஸ்

பட்டாசு வெடிப்பது குறித்து கருத்துத் தெரிவித்த ஐபிஎஸ் அதிகாரி ரூபாவை நடிகை கங்கணா கடுமையாகச் சாடியுள்ளார்.

பல்வேறு மாநிலங்களில் தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனைப் பலரும் சமூக வலைதளங்களில் ஆதரித்தும், எதிர்த்தும் எழுதி வந்தனர்.

கர்நாடக உள்துறைச் செயலாளர் ரூபா ஐபிஎஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "பட்டாசு வெடிப்பது இந்து மத வழக்கம் கிடையாது. இதைச் சொல்வதால் இந்து மதத்தைத் தாக்கிப் பேசுவதாகக் கூறுபவர்கள், புராணங்களிலும் வேதங்களிலும் பட்டாசு வெடிப்பது பற்றி எந்தப் பதிவும் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஐரோப்பியர்கள் மூலமாகத்தான் இந்தியாவுக்குப் பட்டாசு அறிமுகமானது" என்று எழுதியிருந்தார்.

ரூபாவின் இந்தக் கருத்துக்கு 'ட்ரூ இந்தாலஜி' என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துப் பதிவிடப்பட்டது. பலரும் அப்பதிவைப் பகிர்ந்து வந்த நிலையில் 'ட்ரூ இந்தாலஜி' ட்விட்டர் பக்கம் திடீரென முட‌க்கப்பட்டது.

ரூபா கொடுத்த அழுத்தத்தாலேயே அந்தப் பக்கம் முடக்கப்பட்டது என்று பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி ரூபாவை நடிகை கங்கணா ரணாவத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கணா கூறியுள்ளதாவது:

''அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ரூபா போன்ற அதிகாரிகள், பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். ஆனால், அவருடைய அருவருப்பான நடவடிக்கையைப் பாருங்கள். மனதில் வன்மம் கொண்ட அவர் தன்னால் தர்க்கத்தில் வெற்றி பெற முடியவில்லை என்பதால் ட்ரூ இந்தாலஜி பக்கத்தை முடக்க வைத்துள்ளார்.

இட ஒதுக்கீட்டின் விளைவாக, தகுதியில்லாதவர்களுக்கு அதிகாரம் கிடைக்கும்போது அவர்கள் காயங்களை ஆற்றுவதற்குப் பதிலாக, காயப்படுத்தி விடுகின்றனர். அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், அவரது தகுதியின்மையால் அவருடைய விரக்தி வெளிப்படுகிறது என்பதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்''.

இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE