திரையரங்கில் ஓடிடியிலும் ஒரே நாளில் வெளியாகும் வொண்டர் வுமன் 2

'வொண்டர் வுமன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற டிசம்பர் 25ஆம் தேதி அன்று திரையரங்கிலும், ஹெச்பிஓ மேக்ஸ் ஓடிடி தளத்திலும் ஒரே நேரத்தில் வெளியாகும் என வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கரோனா நெருக்கடி காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் 'வொண்டர் வுமன் 1984' உள்ளிட்ட பல்வேறு பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் வெளியீடுகள் ஒத்திவைக்கப்பட்டன. இதில் ஜூன் மாதம் வெளியாகவிருந்த 'வொண்டர் வுமன் 1984', டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.'

ஆனால், 'டெனட்' திரைப்படத்துக்குத் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததைத் தொடர்ந்து தயாரிப்புத் தரப்பான வார்னர் பிரதர்ஸ் ‘வொண்டர் வுமன்’ வெளியீடு குறித்து மறு பரிசீலனை செய்ய ஆரம்பித்தது. கடந்த வாரம், படத்தை நேரடியாக டிஜிட்டலில் வெளியிடலாமா, அல்லது படம் திரையரங்குகளில் வெளியான சில வாரங்கள் கழித்து வெளியிடலாமா அல்லது இன்னும் ஒத்தி வைக்கலாமா எனப் பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.

முடிவில், ஓடிடி, திரையரங்குகள் என இரண்டிலும் ஒரே நாளில் படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குநர் பாடீ ஜென்கின்ஸ், "ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் தாண்டி நம்மிடம் இருக்கும் எந்தவிதமான அன்பையும், மகிழ்ச்சியையும் பகிர நாம் முடிவெடுக்க வேண்டும். எங்கள் ரசிகர்களைப் போலவே எங்கள் திரைப்படத்தையும் நாங்கள் விரும்புகிறோம். அது இந்த விடுமுறைக் காலத்தில் உங்களுக்குச் சிறு சந்தோஷத்தையும், ஆறுதலையும் தரும் என நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் திரையரங்குகள் எங்கெல்லாம் திறக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் டிசம்பர் 16ஆம் தேதி அன்று ‘வொண்டர் வுமன் 1984’ வெளியாகும். சீனாவில் டிசம்பர் 25ஆம் தேதி அன்று வெளியாகிறது. அங்கு முதல் பாகம் 90 மில்லியன் டாலர்களை வசூலித்தது குறிப்பிடத்தக்கது. ஹெச்பிஓ மேக்ஸில் வெளியாகும்போது அதற்காக கூடுதல் கட்டணம் எதையும் செலுத்த வேண்டியதில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE