எஸ்.ஏ.சி கட்சியில் திடீர் திருப்பம்: தலைவர் ராஜினாமா

எஸ்.ஏ.சி ஆரம்பித்த கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து பத்மநாபன் ராஜினாமா செய்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் அரசியல் கட்சியைப் பதிவு செய்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் கட்சி தொடர்பான செய்தி வெளியானதிலிருந்து விஜய் - எஸ்.ஏ.சி இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

தனது மக்கள் இயக்கத்தில் தந்தை நியமித்த நிர்வாகிகள் அனைவரையும் நீக்கிவிட்டு, புதிதாக நிர்வாகிகளை நியமித்தார் விஜய். அதே போல், கட்சிப் பதிவின்போது அதன் தலைவராக பத்மநாபனை நியமித்திருந்தார் எஸ்.ஏ.சி.

அரசியல் கட்சி குறித்த தகவல் வெளியானதிலிருந்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதற்குக் காரணம் விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் ஆனந்த்தான் என்றும் வீடியோ வெளியிட்டார் பத்மநாபன். காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டிருந்தார்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து பத்மநாபன் ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக எஸ்.ஏ.சிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாகவும், கட்சியின் எதிர்காலத்தை அனைத்து விதங்களிலும் மனதில் வைத்து, தலைவர் பதவியிலிருந்து நானே விலகுகிறேன். ஒரு சாதாரண உறுப்பினராக நமது கட்சிக்குப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

கட்சி ஆரம்பத்திலிருந்து சர்ச்சையை எதிர்கொண்டு வரும் எஸ்.ஏ.சிக்கு, தற்போது தலைவரும் ராஜினாமா செய்திருப்பது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE