நவ.27-ல் வெளியாகும் காவல்துறை உங்கள் நண்பன்

By செய்திப்பிரிவு

'காவல்துறை உங்கள் நண்பன்' திரைப்படம் நவம்பர் 27-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

ஆர்.டி.எம் இயக்கியுள்ள 'காவல்துறை உங்கள் நண்பன்' படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி, சரத் ரவி, ஆர்.ஜே.முன்னா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் போஸ்டர்கள், ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை தனஞ்ஜெயன் கைப்பற்றினார். மேலும், இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இதில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் வெற்றிமாறன். ஆகையால், 'காவல்துறை உங்கள் நண்பன்' படத்துக்கு எதிர்பார்ப்பு உருவானது.

நவம்பர் மாதத்தில் வெளியாகும் படங்களுக்கு வி.பி.எஃப் கட்டணங்கள் தேவையில்லை என்று க்யூப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் தயாராகியுள்ள படங்கள் யாவும் வெளியீட்டை உறுதி செய்து வருகின்றன. இதனால், 'காவல்துறை உங்கள் நண்பன்' படமும் தங்களுடைய வெளியீட்டை உறுதி செய்துள்ளது.

நவம்பர் 27-ம் தேதி 'காவல்துறை உங்கள் நண்பன்' திரைப்படம் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைப் படக்குழு தொடங்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE