போலிச் சாமியார்களை ஒரு கடவுளே தோலுரித்துக் காட்டும் படமே 'மூக்குத்தி அம்மன்'
நாகர்கோவிலில் உள்ளூர் தொலைக்காட்சி நிருபராக இருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. அங்கு 11,000 ஏக்கரில் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டவுள்ள ஆசிரமம் குறித்து செய்திகளைச் சேகரிக்கிறார். இன்னொரு பக்கம் தாத்தா, அம்மா, 3 தங்கைகளுடன் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார். குலதெய்வ கோயிலுக்குச் சென்று ஒரு நாள் தங்கி வணங்கினால் கஷ்டங்கள் தீரும் என்று கூறவே, குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் செல்கிறார்கள். அங்கு தனது கஷ்டத்தைச் சொல்லிவிட்டு தூங்கும் போது இரவில் தோன்றுகிறார் மூக்குத்தி அம்மன் (நயன்தாரா).
அதற்குப் பிறகு ஆர்.ஜே.பாலாஜியுடன் பயணிக்கத் தொடங்குகிறார் நயன்தாரா. இருவரும் கோயிலை மக்கள் மத்தியில் பேமஸ் ஆக்குவது, சாமியாரின் நில ஆக்கிரமிப்பை அம்பலப்படுத்துவது, போலிச் சாமியார்களைத் தோலுரிப்பது என நகர்கிறது திரைக்கதை.
என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கியிருப்பது மட்டுமன்றி மூலக்கதையை எழுதியதுடன், நண்பர்களுடன் இணைந்து திரைக்கதை, வசனமும் எழுதியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. கஷ்டங்களை நினைத்து வருந்துவது, கடவுள் வரம் கொடுத்தவுடன் குதூகலிப்பது, போலிச் சாமியாரிடம் சண்டையிடுவது எனக் கதாபாத்திரத்துக்குப் பொருந்தியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. பல காட்சிகளில் ரொம்ப வேகமாக வசனம் பேசி நடித்துள்ளார். அந்த வேகத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
மூக்குத்தி அம்மனாக நயன்தாரா. பொருத்தமான தேர்வு. கடவுள் என்பது யார், மக்கள் எப்படிப் பார்க்க வேண்டும், போலிச் சாமியார்கள் கடவுள் பெயரை வைத்து என்ன செய்கிறார்கள் என்று இவர் பேசியிருக்கும் வசனங்கள் அனைத்துமே சாட்டையடி.
ஆர்.ஜே.பாலாஜியின் அம்மாவாக ஊர்வசி. அவர் நடிப்பு படத்துக்கு மிகப்பெரிய பலம். குழந்தைகளுக்காகப் பொய் சொல்வது, கணவர் இல்லாமல் உருகுவது, குழந்தைகளைத் திட்டுவதற்கு விளக்கம் கொடுப்பது, கணவரைப் பார்த்தவுடன் அடித்துவிட்டுக் கண் கலங்குவது, இறுதியில் கலாய்ப்பது எனக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார்.
போலிச் சாமியாராக அஜய் கோஷ். சில காட்சிகளில் அவருடைய நடிப்பு அதிக செயற்கையாக இருக்கிறது. மெளலி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் பொருத்தமான தேர்வு.
நாகர்கோவிலின் அழகை அப்படியே கடத்தியுள்ளது தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு. டாப் ஆங்கிள் காட்சிகள் அவ்வளவு குளிர்ச்சி. படத்தின் பாடல்கள் அனைத்துமே வேகத் தடைதான். எதுவுமே படத்துடன் ஒட்டவில்லை. அதற்குப் பதிலாக காட்சிக்கு ஏற்றமாதிரி வரும் பழைய பாடல்கள் பொருந்தியுள்ளன. பின்னணி இசையிலும் இன்னும் மெருகூட்டியிருக்கலாம் கிரிஷ் கோபாலகிருஷ்ணன். ஆர்.கே.செல்வாவின் எடிட்டிங் கதையை அருமையாகக் கோத்திருக்கிறது.
படத்தின் முதல் பாதி கலகலப்பாக நகர்கிறது. நயன்தாரா வந்தவுடன் சூடு பிடிக்கும் திரைக்கதை, "சாமி vs சாமி'யார்'" என்ற இடைவேளைக் காட்சியில் நமது ஆர்வத்தை அதிகரிக்கிறது. ஆனால், இரண்டாம் பாதி காட்சிகளை இன்னும் சுவாரசியப்படுத்தி இருக்கலாம். முதல் பாதியில் இருந்த கலகலப்பு, இரண்டாம் பாதியில் பெரும்பாலும் காணாமல் போகிறது.
பெரிய கார்ப்பரேட் சாமியாரை இவர்கள் எதிர்கொள்ளும் அபத்தமான காட்சிகளை நம்பத்தகுந்தாற் போல மாற்றியிருந்தால் ஈர்த்திருக்கும். ஆர்.ஜே.பாலாஜி - சாமியார் பேட்டியில் முதல் கேள்வியிலேயே தவறானவர் என்று தெரிந்தவுடனும், அடுத்த கேள்விக்கும் வந்து அமர்வது எல்லாம் நம்பும்படியாக இல்லை.
எல்லையில் ராணுவ வீரர்களின் போராட்டம், உள்ளூரில் விவசாயிகளின் பிரச்சினை, பன்னாட்டு நிறுவனங்களின் சதி வலை ஆகியவற்றுடன் கார்ப்பரேட் சாமியார், போலிச் சாமியார் பரிதாபங்கள் என்கிற கடையிலும் சரக்கு தீர்ந்து போகும் நிலை வந்துவிட்டது. தமிழ் சினிமா படைப்பாளிகள் கவனிக்க!
மொத்தத்தில் தீபாவளி நாளில் லாஜிக் மறந்து, குடும்பத்துடன் பார்க்கக் கூடிய அளவுக்கு வந்துள்ள கலகலப்பான படம் ‘மூக்குத்தி அம்மன்’. திரைக்கதைக்கு இன்னும் கொஞ்சம் அம்மன் அருள் கிடைத்திருந்தால், இதைத் தவறவிடக் கூடாத படம் என்றே சொல்லியிருக்கலாம்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago