’மணிவண்ணனை சேர்த்ததால்தான் தோல்வின்னாங்க; சினிமால இப்படி சென்டிமென்ட் பார்ப்பாங்க; ‘இன்னொரு கதை ரெடி பண்ணுடா’ன்னு மணிவண்ணன்கிட்ட சொன்னேன்!’’ என்று இயக்குநர் பாரதிராஜா தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
இயக்குநர் பாரதிராஜா, ‘என் இனிய தமிழ் மக்களே’ எனும் இணைய தள சேனலில் தன் திரை அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.
‘நிழல்கள்’ திரைப்படம் குறித்த அனுபவங்களை அதில் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது:
‘’என்னிடம் உதவி இயக்குநராக இருந்த மணிவண்ணன், மிகச்சிறந்த எழுத்தாளர். அவனை ‘நிழல்கள்’ படத்துக்கு வசனம் எழுதச் சொன்னேன். ‘மடைதிறந்து தாவும் நதி அலை நான்’ பாடலை வித்தியாசமான முறையில் படமாக்கினேன். இன்றைக்கு டெக்னிக்கலான விஷயங்கல் நிறையவே இருக்கின்றன. ஆனால் அன்றைக்கு இங்கிருந்து சந்திரசேகர் குதிப்பதையும் அங்கிருந்து சந்திரசேகர் குதிப்பதையும் எடிட் செய்து, சேர்த்து படமாக்கினேன்.
அதேபோல், பாடல் கம்போஸிங் கடற்கரையில் நடப்பது போல் படமெடுத்தேன். இதுவும் வித்தியாசமான சிந்தனைதான். இந்தப் பாடலையும் படமாக்கப்பட்ட விதத்தையும் இன்றைக்கும் பலரும் ரசிக்கிறார்கள். இயக்குநர் மணிரத்னம் கூட, இந்தப் பாடலை படமாக்கிய விதம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது என்று சொல்லியிருக்கிறார்.
இந்த ‘நிழல்கள்’ படம் ஏகப்பட்ட மெசேஜ்களை பளீரென்று சொல்லியிருந்த படம். நிவாஸுக்கும் எனக்கும் ஒரு தகராறு ஏற்பட்டதால், ‘நிழல்கள்’ படத்தில் ஒளிப்பதிவாளர் கண்ணனை சேர்த்துக்கொண்டேன். ஜெயலலிதா மேடம் கடைசியாக நடித்த படமான ‘நதியைத் தேடி வந்த கடல்’ படத்தில் கண்ணனின் ஒளிப்பதிவில் ஈர்க்கப்பட்டேன். ஆனால் கண்ணன், தன்னை நடிக்க அழைத்திருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டான். பிறகு ‘நிழல்கள்’ படம் முழுக்கவே பிரமாதமாக ஒர்க் பண்ணியிருந்தான்.
‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ பாடலை வைரமுத்து எழுதினான். முதல் பாடல். இளையராஜாவிடம் பாடலைக் கொடுத்ததும், பார்த்துவிட்டு எல்லோரையும் வெளியே போகச் சொன்னான். டியூனுக்கு வரிகளை வாசித்தான். ‘நல்லா எழுதிருக்கான்யா. நல்லா வருவான்’ என்று இளையராஜா சொன்னான். நான் நிம்மதியானேன். இந்தப் பாடலை சென்னை காலேஜ் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் சுதந்திரமாக எடுத்தேன். இப்போது போல் அப்போதெல்லாம் கெடுபிடிகள் கிடையாது.
‘நிழல்கள்’ படத்துக்கு பேனர் வைத்திருந்தேன். அதைப் பார்த்துவிட்டு இயக்குநர் பாலசந்தர் போன் செய்து பாராட்டினார். ‘16 வயதினிலே’ படம் பார்த்து பாராட்டியவர், ‘புதிய வார்ப்புகள்’ பார்த்துவிட்டு பாராட்டியவர், ‘நிழல்கள்’ பேனர் பார்த்துவிட்டே பாராட்டினார். சென்ஸாரில் படம் பார்த்துவிட்டு எல்லோரும் பாராட்டினார்கள். இந்தியன் பனோரமாவுக்கு சிபாரிசு செய்து அனுப்பினார்கள். புரட்சிகரமான படம் என்றார்கள்.
ஆனால், படம் ஓடவில்லை. நான் சந்தித்த முதல் தோல்வி. கமல் படம் பார்த்துவிட்டு அருமையாக இருக்கிறது என்று சொன்னார். ஆனால் பாலசந்தர் சார் இயக்கத்தில், கமல், ஸ்ரீதேவி நடித்து வெளியான ‘வறுமையின் நிறம் சிகப்பு’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. இரண்டும் ஒரேவிஷயம்தான். ஆனால் அது கமர்ஷியலாகச் சொல்லப்பட்டிருந்தது. வெற்றி பெற்றது.
எட்டு முதல் ஒன்பது லட்ச ரூபாய் வரை விநியோகஸ்தர்களுக்கு திருப்பித் தரவேண்டிய நிலை ஏற்பட்டது. வேறு வழியில்லை. என்னை நம்பித்தானே படம் வாங்கினார்கள். என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போது என் நண்பர் செவன்த் சேனல் நாராயணன், ‘ராமசாமி உடையாருக்கு போன் செய், உதவுவார்’ என்று சொன்னார்.
அவர் எனக்கு அறிமுகமில்லை. சரியென்று போன் செய்தேன். விஷயம் சொன்னேன். உடனே செக் கொடுத்து அனுப்பிவைத்தார். மறக்கவே முடியாத உதவி அது.
இந்த சமயத்தில், உதவி இயக்குநரான மணிவண்ணனை வசனம் எழுதவைத்து, படத்தில் நடிக்கவும் வைத்திருந்தேன் அல்லவா. ‘மணிவண்ணனை சேர்த்துக்கொண்டதால்தான் உங்களுக்குத் தோல்வி, இந்த பொம்மையை அங்கே வைத்ததால்தான் தோல்வி, இதை அப்படி வைத்ததால்தான் தோல்வி’ என்று எதற்கெடுத்தாலும் சென்டிமென்ட் பார்க்கிற சினிமா உலகம், ஏதேதோ சொன்னது.
மணிவண்ணன் சிறந்த ரைட்டர். இந்த சென்டிமென்டையெல்லாம் நான் நம்புவதுமில்லை. மணிவண்ணனை அழைத்தேன். ‘டேய்... பிரமாதமா ஒரு கதை பண்ணுடா. பக்கா கமர்ஷியலா, இப்போ எடுத்ததுக்கு அப்படியே நேர்மாறா இருக்கணும். உடனே ரெடி பண்ணுடா’ என்று சொன்னேன். அதுதான் ‘அலைகள் ஓய்வதில்லை’’’
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
41 mins ago
சினிமா
44 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago