‘வருமானம் மட்டும்தான் குறிக்கோளா?’- நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு ஆளான அமிதாப்

By ஐஏஎன்எஸ்

இந்து மத நம்பிக்கையைப் புண்படுத்தியதாக நெட்டிசன்கள் அமிதாப் பச்சனைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி கவுன் பனேகா க்ரோர்பதி. கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் பேஜாவாடா வில்ஸன், நடிகர் அனூப் சோனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இதில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

டிசம்பர் 25, 1927 அன்று, டாக்டர் அம்பேத்கரும், அவரது ஆதரவாளர்களும் எந்தப் புத்தகத்தை எரித்தனர் என்ற ஒரு கேள்வி இடம்பெற்றிருந்தது. இதற்கு ஏ) விஷ்ணு புராணம் பி) பகவத் கீதை சி) ரிக்வேதம் டி) மனுஸ்மிருதி என்ற நான்கு தேர்வுகளும் கொடுக்கப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி இடதுசாரிக் கொள்கைப் பிரச்சாரத்தை மேற்கொள்கிறது என ஒரு சிலர் குற்றம் சாட்டி இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்தக் கேள்வி இடம்பெற்ற ஸ்க்ரீன்ஷாட் இணையத்தில் பகிரப்பட்டு, கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இன்னும் சிலர் இந்துக்களின் உணர்வுகள் இதனால் புண்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளனர்.

மேலும், இந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், அமிதாப் பச்சன் ஆகியோருக்கு எதிராக லக்னோவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தச் சர்ச்சைக்குப் பிறகு அமிதாப் பச்சனின் சமூக வலைதளப் பக்கத்தில் நெட்டிசன்கள் தொடர்ந்து அவரை விமர்சித்தும், கேலி செய்தும் வருகின்றனர்.

அமிதாப் பச்சனின் ட்விட்டர் பக்கத்தில் பயனர் ஒருவர், ''வருமானம் மட்டும்தான் அமிதாப் பச்சனுக்குக் குறிக்கோள். கேபிசி நிகழ்ச்சியில் அவர்களால் எத்தனையோ லட்சம் கேள்விகளை உருவாக்க முடியும். ஆனால் வேண்டுமென்றே சர்ச்சைக்குரிய கேள்விகளையே அவர்கள் தேர்வு செய்கின்றனர்'' என்று விமர்சித்துள்ளார்.

மற்றொரு பயனர், ''இதற்கு முன்பு பலமுறை இதுபோல நடந்துள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'' என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE