வி.பி.எஃப் கட்டண விவகாரம்: பாரதிராஜா அறிக்கை; தீபாவளிக்குப் படங்கள் வெளியாவதில் சிக்கல்?

வி.பி.எஃப் கட்டண விவகாரம் தொடர்பாக பாரதிராஜாவின் அறிக்கையால், தீபாவளிக்குப் படங்கள் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

கரோனா ஊரடங்கு சமயத்தில், தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து பிரிந்து 'தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்' உருவானது. இதன் தலைவராக பாரதிராஜா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். தலைவரான சில தினங்களில், புதிய படங்கள் வெளியீடு தொடர்பாக திரையரங்க உரிமையாளர்களுக்கு நிபந்தனை விதித்தார். என்னவென்றால், இனிமேல் வி.பி.எஃப் கட்டணத்தைத் தயாரிப்பாளர்கள் கட்டமாட்டோம் என்று தெரிவித்தார்.

இந்த முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். ஆனால், திரையரங்குகள் மூடியிருந்த சமயத்தில் இந்த விஷயங்கள் நடந்ததால் அதோடு முடிக்கப்பட்டது. தற்போது நவம்பர் 10-ம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. தீபாவளிக்குச் சில படங்களும் வெளியிடத் திட்டமிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், இன்று (நவம்பர் 2) காலை தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, தயாரிப்பாளர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் பாரதிராஜா கூறியிருப்பதாவது:

"தமிழ்த்‌ திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள்‌ சங்கம்‌ ஆகஸ்ட்‌ மாதம்‌ தொடங்‌கியவுடன்‌, இனிமேலும்‌ வி.பி.எஃப் என்ற கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள்‌ சங்கத்தைச் சேர்ந்த அனைவருக்கும்‌, அனைத்து டிஜிட்டல்‌ புரொஜக்‌ஷன் (QUBE/UFO/PRASAD) நிறுவனங்களுக்கும்‌ முறையாகக் கடிதம்‌ அனுப்பினோம்.

அதில்‌ 12 வருடங்களுக்கு மேலாகக் கட்டி வரும்‌ VPF என்கிற வாராவாரம்‌ கட்டணத்தை இனிமேல்‌ கொடுக்க முடியாது. டிஜிட்டல்‌ நிறுவனங்கள்‌ மாஸ்டரிங்‌, குளோனிங்‌, டெலிவரி மற்றும்‌ சேவைக்கான ஒரு முறை (ONE TIME PAYMENT) கட்டணம்‌ எதுவோ அதை மட்டுமே இனிமேல்‌ எங்களால்‌ தர முடியும்‌ என்று தெரிவித்து இருந்தோம்‌.

திரையரங்கில்‌ உள்ள புரொஜக்டர்‌ சம்பந்தப்பட்ட லீஸ்‌ தொகையை திரையரங்குகள்‌தான்‌ கட்ட வேண்டும்‌, தயாரிப்பாளர்கள்‌ அல்ல என்பதையும்‌ தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம்‌.

அத்தகைய ஒரு முறை கட்டண முறைக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால்‌, திரையரங்குகள்‌ மீண்டும்‌ திறக்கப்பட அனுமதி வந்தாலும்‌, எங்களின்‌ புதிய திரைப்படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோம்‌ என்பதையும்‌ குறிப்பிட்டிருந்தோம்‌.

100 பேருக்கும்‌ மேல்‌ நடப்பு தயாரிப்பாளர்கள்‌ இந்த முடிவை எடுத்துத் தெரிவித்த போதிலும்‌, திரையரங்கு உரிமையாளர்களும்‌, டிஜிட்டல்‌ புரொஜக்‌ஷன்‌ நிறுவனங்களும்‌ (QUBE/UFO), எங்களின்‌ கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல்‌, நாங்கள்‌ தொடர்ந்து வி.பி.எஃப் கட்டணத்தை வாங்குவோம்‌ என்று தெரிவித்துள்ளனர்‌.

தயாரிப்பாளர்கள்‌ அனைவரும்‌ ஒருங்கிணைந்து வெளியிட்டிருந்த 5 கோரிக்கைகளில்‌ ஒன்றைக் கூட அவர்கள்‌ ஏற்றுக்‌கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளதால்‌, நடப்பு தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தைச் சேர்ந்த அனைத்துத் தயாரிப்பாளர்களும்‌ ஒருங்கிணைந்து, வி.பி.எஃப் கட்டணத்திற்கு ஒரு முடிவு வரும்‌ வரை தங்களின்‌ புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த வி.பி.எஃப் கட்டணப்‌ பிரச்சினைக்கு முடிவு எட்டும்‌ வரை, அனைத்துத் தயாரிப்பாளர்களும்‌, தங்களின்‌ புதிய படங்களின்‌ வெளியீட்டுத் தேதியை தங்களுடைய சங்க நிர்வாகிகளுடன் கலந்தோசித்து முடிவு எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்‌"

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்தச் சுற்றறிக்கை இதர சங்கங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாரதிராஜாவின் இந்த அறிக்கையின் மூலம், தீபாவளிக்குப் படங்கள் வெளியீட்டில் சிக்கல் இருக்கும் என்பது தெளிவாகிறது.

திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் விசாரித்தபோது, நாளை (அக்டோபர் 3) காணொலிக் காட்சி வாயிலாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதை உறுதி செய்தார்கள். இந்தக் கூட்டத்தில் அவர்களுடைய முடிவு என்ன என்பது தெரியவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE