என்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது; பெண்கள் பணிபுரிய கூடாது என்று நான் சொல்லவே இல்லை - முகேஷ் கண்ணா விளக்கம்

2017-ம் ஆண்டு ஹாலிவுட்டில், தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களைப் பெண் கலைஞர்கள் மீடூ என்கிற இயக்கத்தின் பெயரில் வெளியே சொல்ல ஆரம்பித்தனர். இந்த இயக்கம் மிகப் பெரியதாக வளர்ந்து பல நாடுகளில் பிரபலமானது. மீடூ இயக்கத்தை முன்வைத்து அந்தந்த நாடுகளில் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியே வர ஆரம்பித்தன.

இந்தியாவிலும் 2018 ஆம் ஆண்டு நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன்வைத்ததன் மூலம் மீடூ இயக்கம் வளர ஆரம்பித்தது. இன்று வரை திரைத்துறையைச் சேர்ந்த பல பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் ரீதியிலான கொடுமைகள் குறித்து மீடூ இயக்கத்தின் உதவியோடு பேசி வருகின்றனர்.

சக்திமான் தொடர் மூலம் பிரபலமடைந்த நடிகர் முகேஷ் கண்ணா இந்த இயக்கம் பற்றிப் பேசுகையில், "பெண்களின் வேலை வீட்டைப் பார்த்துக் கொள்வது. வேலை செய்ய ஆரம்பித்தவுடன்தான் இந்த மீடு பிரச்சினை தொடங்கியது. ஆண்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நடக்க வேண்டும் என்று இன்று பெண்கள் பேசி வருகின்றனர்" என்கிற ரீதியில் கருத்துக் கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கு இணையத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. பலரும் முகேஷ் கண்ணாவை கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்நிலையில் முகேஷ் கண்ணா இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

என்னுடைய பேச்சு மிகவும் தவறான முறையில் புரிந்து கொள்ளப்பட்டிருப்பது எனக்கு ஆச்சர்யமளிக்கிறது. மேலும் முற்றிலும் குறைபாடான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டுள்ளது. நான் பெண்களுக்கு எதிரானவன் என்பது போல சித்தரிக்கப்படுகிறது. ஆனால் என்னைப் போல பெண்களை மதிப்பவர்கள் யாரும் கிடையாது என்பதை என்னால் மிகவும் நம்பிக்கையுடன் சொல்லமுடியும். பெண்கள் பணிபுரிய கூடாது என்று நான் சொல்லவே இல்லை.

என்னுடைய பேச்சுகளை தவறான முறையில் திரிக்க வேண்டாம் என்று என்னுடைய நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு முகேஷ் கண்ணா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE