'ஜகமே தந்திரம்' படக்குழுவினருக்குத் திரையரங்கு உரிமையாளர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

தீபாவளி வெளியீடு குறித்து 'ஜகமே தந்திரம்' படக்குழுவினருக்குத் திரையரங்க உரிமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் அனைத்துமே மூடப்பட்டன. கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியதிலிருந்து பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வந்தது. சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகள் திறப்புக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துவிட்டது.

ஆனால், தமிழக அரசோ திரையரங்குகள் திறப்பு தொடர்பாக மவுனம் காத்து வந்தது. நேற்று (அக்டோபர் 31) தமிழக அரசு பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் திறப்புக்கு அனுமதி கொடுத்துவிட்டது. தமிழகத்தில் நவம்பர் 10-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் தீபாவளிக்கு படங்களை வெளியிட தயாராகி வருகிறார்கள்.

இந்நிலையில் ரோகிணி திரையரங்க உரிமையாளரான நிகிலேஷ் சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"தீபாவளிக்கு அதிகரித்து வரும் தேவையை மனதில் வைத்து, நடிகர் தனுஷும், தயாரிப்பு நிறுவனமும் 'ஜகமே தந்திரம்' திரைப்படத்தை வெளியிடுவார்கள் என நம்புகிறேன். ரசிகர்களை மீண்டும் திரையரங்குக்கு ஈர்க்க சரியான திரைப்படமாக இருக்கும். 50 சதவீதம் என்கிற விதிமுறை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது"

இவ்வாறு நிகிலேஷ் சூர்யா தெரிவித்துள்ளார்.

ஆனால், 'ஜகமே தந்திரம்' படக்குழுவினர் இதுவரை வெளியீடு குறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது நினைவுக் கூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE