குற்றவாளிகளை நாயகனாகக் காட்டினால் இப்படித்தான் நடக்கும்: நிகிதா கொலைச் சம்பவம் குறித்து கங்கணா கருத்து

'மிர்ஸாபுர்' தொடரைப் பார்த்த பின்தான் நிகிதாவைக் கொலை செய்யும் யோசனை வந்தது என்று குற்றவாளி டௌசிஃப் கூறினார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகை கங்கணா ரணாவத் கருத்துக் கூறியுள்ளார்.

ஹரியாணாவைச் சேர்ந்த கல்லூரி மாணவி நிகிதா டோமர் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். முக்கியக் குற்றாவாளியாக டௌசிஃப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் நடந்தது.

நிகிதா தேர்வெழுதிவிட்டு கல்லூரியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது டௌசிஃபும், ரேஹான் என்பவரும் நிகிதாவைக் கடத்த முயன்றனர். நிகிதா எதிர்த்துப் போராடவே குற்றவாளி அவரைச் சுட்டுக் கொன்றுள்ளார்.

'மிர்ஸாபுர்' தொடரைப் பார்த்த பின்தான் நிகிதாவைக் கொலை செய்யும் யோசனை வந்தது என்று குற்றவாளி டெளசிஃப் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கங்கணா ரணாவத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"குற்றவாளிகளை நாயகர்களாகக் காட்டும்போது இப்படித்தான் நடக்கும். அழகாக இருக்கும் ஆண்கள் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடிக்கும்போது அவர்களை வில்லன்களாகக் காட்டாமல் எதிர் நாயகர்களாகக் காட்டுகின்றனர். அப்படிச் செய்தால் இதுதான் விளைவு. அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும் பாலிவுட் வெட்கப்பட வேண்டும்".

இவ்வாறு கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தச் சம்பவம் நடந்தவுடன் கங்கணா தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரான்ஸில் நடந்த விஷயம் குறித்து ஒட்டுமொத்த உலகும் அதிர்ச்சியில் உள்ளது. இஸ்லாமிய மதத்துக்கு மாற முடியாது என்று மறுத்ததால் ஒரு இந்துப் பெண், பட்டப்பகலில், அவளது கல்லூரிக்கு வெளியே சுடப்பட்டுள்ளார். உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நிகிதாவின் துணிச்சல் ராணி லக்‌ஷ்மி பாய், பத்மாவதியின் துணிச்சலுக்குத் துளியும் குறைந்ததல்ல. நிகிதா மீது வெறி கொண்டு தன்னுடன் வந்து வாழ அவர் வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு இணங்கிவிடாமல் உயிரை விடத் தீர்மானித்திருக்கிறார். தேவி நிகிதா ஒவ்வொரு இந்துப் பெண்ணின் கண்ணியம் மற்றும் பெருமையைக் காப்பாற்றியிருக்கிறார்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE